ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 88 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற வங்கதேச அணி, 2-0 என ஒருநாள் தொடரை வென்றது.
ஆஃப்கானிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் டி20 தொடரில் ஆடிவருகிறது. முதலில் ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி, 1-0 என முன்னிலை வகித்த நிலையில், 2வது போட்டி இன்று நடந்தது.
2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் ஆடியது. வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் அதிரடியாக ஆடி சதமடித்தார். தமீம் இக்பால் (12), ஷகிப் அல் ஹசன் (20) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 3வது விக்கெட்டுக்கு லிட்டன் தாஸும் முஷ்ஃபிகுர் ரஹீமும் இணைந்து 202 ரன்களை குவித்தனர். சிறப்பாக விளையாடி சதமடித்த லிட்டன் தாஸ் 136 ரன்களில் ஆட்டமிழந்தார். முஷ்ஃபிகுர் ரஹீம் 86 ரன்னில் ஆட்டமிழந்து, 13 ரன்னில் சதத்தை தவறவிட்டார். 50 ஓவரில் 306 ரன்களை குவித்தது வங்கதேச அணி.
307 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ரஹ்மத் ஷா சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ரஹ்மத் ஷா 52 ரன்கள் அடித்தார். மிடில் ஆர்டரில் நஜிபுல்லா ஜட்ரான் நன்றாக ஆடி அரைசதமடித்தார். ஆனால் அவரும் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். நபி 32ரன்களும், ரஷீத் கான் 29 ரன்களும் அடிக்க, மற்ற வீரர்கள் யாருமே சரியாக ஆடாததால் 46வது ஓவரில் 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற வங்கதேச அணி, 2-0 என ஒருநாள் தொடரை வென்றது.
