இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவருமே சதமடித்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்ததோடு பல சாதனைகளை வாரி குவித்துள்ளனர். 

விசாகப்பட்டினத்தில் நடந்துவரும் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த இன்னிங்ஸில்தான் முதன்முறையாக ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கினார். ரோஹித்தும் மயன்க் அகர்வாலும் இணைந்து முதன்முறையாக இந்த போட்டியில்தான் தொடக்க ஜோடியாக இறங்கினர். 

ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்முறையாக தொடக்க வீரராக இறங்கியதால் அனைவரின் கவனமும் பார்வையும் ரோஹித் மீதே இருந்தது. அவரும் டெஸ்ட் அணியில் தனக்கான இடத்தை தக்கவைக்க, சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். ஆனால் தனக்கு இருந்த நெருக்கடியை மண்டைக்கு ஏற்றாமல் தனது இயல்பான ஆட்டத்தை ஆடி சதமடித்தார் ரோஹித் சர்மா. 

ரோஹித் சர்மாவுக்கு நன்றாக ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய மயன்க் அகர்வாலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தார். இருவருமே சதமடித்து அசத்தினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 317 ரன்களை குவித்தனர். ரோஹித் சர்மா 176 ரன்களில் ஆட்டமிழந்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதமடிக்க கிடைத்த அரிய வாய்ப்பை தவறவிட்டார். சதமடித்த மயன்க் அகர்வால் தொடர்ந்து ஆடிவருகிறார். 

இந்த இன்னிங்ஸில் முதல் விக்கெட்டுக்கு 317 ரன்களை குவித்த ரோஹித் சர்மா - மயன்க் அகர்வால் ஜோடி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய பேட்டிங் ஜோடியின் பல சாதனைகளை முறியடித்து புதிய மைல்கற்களை எட்டியுள்ளது. 

ரோஹித் சர்மா - மயன்க் அகர்வால் ஜோடியின் சாதனை பட்டியல்:

1. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில், இந்திய பேட்டிங் பார்ட்னர்ஷிப்பின் அதிகபட்ச ஸ்கோர் 317 தான். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக எந்த விக்கெட்டுக்கான பார்ட்னர்ஷிப்பிலும் இதுதான் அதிகபட்ச ஸ்கோர். இதற்கு முன்னதாக ராகுல் டிராவிட் - வீரேந்திர சேவாக் ஜோடி, 2007-08ம் ஆண்டில் சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில், இரண்டாவது விக்கெட்டுக்கு அடித்த 268 ரன்கள் தான், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய ஜோடியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஸ்கோராக இருந்தது. அதை முறியடித்துள்ளது ரோஹித்  - மயன்க் ஜோடி.

2. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் இந்திய தொடக்க ஜோடி அடித்த அதிகபட்ச ஸ்கோரும் இதுதான். இதற்கு முன்னதாக சேவாக்கும் கம்பீரும் இணைந்து அடித்த 218 ரன்கள் தான் அதிகபட்ச தொடக்க ஜோடியின் ஸ்கோராக இருந்தது. 

3. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய தொடக்க ஜோடியின் மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர், ரோஹித் - மயன்க் ஜோடி அடித்த 317 ரன்கள் தான். 1995-56ம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 413 ரன்களை குவித்த வினூ மங்கத் - பங்கஜ் ராய் ஜோடி முதலிடத்திலும் 2006ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 410 ரன்களை குவித்த ராகுல் டிராவிட் - சேவாக் ஜோடி இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் முதல் விக்கெட்டுக்கு 317 ரன்களை குவித்த ரோஹித் - மயன்க் ஜோடி மூன்றாவது இடத்தில் உள்ளது. 

4. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய தொடக்க ஜோடியும் இதுதான். ரோஹித் - மயன்க் ஜோடி இந்த இன்னிங்ஸில் 9 சிக்ஸர்களை அடித்தது. நவ்ஜோத் சிங் சித்து - மனோஜ் பிரபாகர் தொடக்க ஜோடி மற்றும் சேவாக் - முரளி விஜய் ஆகிய இரண்டு ஜோடிகளும் தலா 8 சிக்ஸர்களை விளாசி அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.