இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் வெற்றிகளை குவித்துவருகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 2-0 என தொடரையும் வென்றது. இது சொந்த மண்ணில் இந்திய அணி தொடர்ச்சியாக வெல்லும் 11வது டெஸ்ட் தொடர். இதன்மூலம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிகமான டெஸ்ட் தொடர்களை வென்ற அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. 

இந்த 11 டெஸ்ட் தொடர் வெற்றிகளில் 9 வெற்றிகள் கோலியின் கேப்டன்சியில் பெறப்பட்டவை. இதற்கு முன்னதாக ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக ஆஸ்திரேலியாவில் 10 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. அதேபோல பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரெலிய அணியும் ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. 

ஸ்டீவ் வாக், பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிகள் அந்த காலக்கட்டத்தில் உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய அபாரமான மற்றும் அபாயகரமான அணிகள். அந்த அணிகளின் சாதனையையே இந்திய அணி முறியடித்துள்ளது. 

இந்திய அணி தொடர்ச்சியாக இந்திய மண்ணில் வென்றுள்ள 11 தொடர்களில் 9 தொடர்கள் கோலி தலைமையில் வென்றது. இந்த சாதனையில் தோனிக்கும் பங்குண்டு. அவரது தலைமையில் வென்ற 2 தொடர்களும் இதில் அடக்கம். 

இந்திய அணி 2013லிருந்து இந்திய மண்ணில் தொடர்ச்சியாக வென்ற 11 டெஸ்ட் தொடர்களின் பட்டியலை பார்ப்போம். 

1. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2013ல் நடந்த டெஸ்ட் தொடரை 4-0 என இந்திய அணி வென்றது. 

2. அதே ஆண்டில் இந்தியாவிற்கு வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை 2 டெஸ்ட் போட்டிகளிலும் வீழ்த்தி 2-0 என இந்திய அணி வென்றது. இந்த 2 தொடர்களும் தோனியின் கேப்டன்சியில் இந்திய அணி வென்ற தொடர்கள். 

3. கோலி கேப்டனான பிறகு, 2015ல் தென்னாப்பிரிக்க அணி இந்தியாவிற்கு வந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. அந்த தொடரை 3-0 என இந்திய அணி வென்றது. 

4. 2016ல் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 3-0 என வெற்றி

5. அதே ஆண்டில் 5 போட்டிகள் கொண்ட இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-0 என இந்திய அணி வென்றது. 

6. 2017ல் ஒரேயொரு டெஸ்ட்டில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா வென்றது. 

7. அதே ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என வெற்றி

8. அதே ஆண்டில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இலங்கையை வீழ்த்தி வெற்றி.

9. 2018ல் முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராக ஆடியது ஆஃப்கானிஸ்தான் அணி. பெங்களூருவில் நடந்த ஒரேயொரு டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி பெற்று 1-0 என தொடரை வென்றது. 

10. கடந்த ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 2-0 என வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது இந்திய அணி. 

11. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நடப்பு தொடரில் வெற்றி.

இவைதான் இந்திய அணி இந்திய மண்ணில் வென்ற தொடர்ச்சியாக வென்ற 11 டெஸ்ட் தொடர்கள்.