ஐபிஎல் 15வது சீசனின் மிகப்பெரிய சிக்ஸரை குஜராத் டைட்டன்ஸூக்கு எதிரான போட்டியில் விளாசினார் பஞ்சாப் கிங்ஸ் வீரர் லியாம் லிவிங்ஸ்டோன்.
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் அபாரமாக விளையாடி தொடர் வெற்றிகளை பெற்று ஒரே ஒரு தோல்வியை மட்டுமே அடைந்திருந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 2வது தோல்வியை பரிசளித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.
மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 143 ரன்கள் மட்டுமே அடித்தது. 144 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பஞ்சாப் அணி 16வது ஓவரிலேயே இலக்கை அடித்து அபார வெற்றி பெற்றது. தவான் அரைசதம் அடித்திருந்தாலும், லியாம் லிவிங்ஸ்டோன் தான் ஒரே ஓவரில் 30 ரன்களை விளாசி 16வது ஓவரில் ஆட்டத்தை முடிக்க உதவினார்.
15 ஓவரில் பஞ்சாப் கிங்ஸ் அணி 117 ரன்கள் அடித்திருந்தது. கடைசி 5 ஓவரில் பஞ்சாப் அணிக்கு 27 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 16வது ஓவரை ஷமி வீச, அந்த ஓவரின் முதல் 3 பந்துகளில் 3 சிக்ஸர்கள் விளாசிய லிவிங்ஸ்டோன், கடைசி 3 பந்தில் 10 ரன்கள் அடிக்க, அந்த ஓவரிலேயே போட்டி முடிந்தது.
ஷமி வீசிய 16வது ஓவரின் முதல் பந்தை லிவிங்ஸ்டோன் அடித்த சிக்ஸர் 117 மீ தூரம் சென்றது. இந்த மெகா சிக்ஸரை பார்த்து அனைவருமே வியந்து பார்த்தனர். இதுதான் இந்த சீசனில் மிகப்பெரிய சிக்ஸர் ஆகும். மேலும், ஐபிஎல் வரலாற்றில் 4வது மிகப்பெரிய சிக்ஸர் ஆகும்.
2011ல் ஆடம் கில்கிறிஸ்ட் அடித்த 122 மீட்டர் சிக்ஸர் தான், ஐபிஎல்லின் பெரிய சிக்ஸர். ராபின் உத்தப்பா அடித்த 120 மீட்டர் சிக்ஸர் தான் இரண்டாவது பெரிய சிக்ஸர். 119 மீட்டர் தொலைவிற்கு கிறிஸ் கெய்ல், யுவராஜ் சிங், ரோஸ் டெய்லர் ஆகிய மூவரும் 3வது பெரிய சிக்ஸரை அடித்துள்ளனர். அதற்கடுத்தபடியாக 4வது பெரிய சிக்ஸராக 117 மீட்டர் சிக்ஸரை லிவிங்ஸ்டோன் அடித்துள்ளார். 117 மீட்டர் தொலைவிற்கு கம்பீர் மற்றும் பென் கட்டிங் ஆகிய இருவரும் அடித்துள்ளனர்.
