ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது. லண்டன் லார்ட்ஸில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 258 ரன்களையும் ஆஸ்திரேலிய அணி 250 ரன்களையும் அடித்தன. 

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, பென் ஸ்டோக்ஸின் அபாரமான சதத்தால், 5 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. 48 ஓவரில் 267 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 47.3 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் அடித்தது. இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. 

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆர்ச்சர் 148 கிமீ வேகத்தில் வீசிய பவுன்ஸரில், ஸ்மித்துக்கு பின் கழுத்தில் அடிபட்டது. அதனால் அவரால் இரண்டாவது இன்னிங்ஸில் ஆடமுடியவில்லை. எனவே இரண்டாவது இன்னிங்ஸில் அவருக்கு பதிலாக லாபஸ்சாக்னே பேட்டிங் ஆடினார். 

கிரிக்கெட் வரலாற்றில் காயத்தால் ஆடமுடியாத பேட்ஸ்மேனுக்கு பதிலாக மாற்று வீரர் களமிறங்கியது இதுதான் முதன்முறை. இதுவரை சப்ஸ்டிடியூட் ஃபீல்டர் மட்டும்தான் களமிறங்குவார். அண்மையில் தான், கிரிக்கெட் போட்டியில் காயமடைந்த பேட்ஸ்மேனுக்கு பதிலாக மாற்று வீரர் களமிறங்கலாம் என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டது. புதிய விதி அமலுக்கு வந்தபின்னர், சப்ஸ்டிடியூட் பேட்ஸ்மேனாக களமிறங்கிய முதல் வீரர் லாபஸ்சாக்னே தான். 

கடைசி நாளில், அணி நெருக்கடியான நிலையில் இருந்தபோது, ஸ்மித் என்ற ஜாம்பவானுக்கு பதிலாக களமிறங்கிய லாபஸ்சாக்னே, சிறப்பாக ஆடி தனது முத்திரையை பதித்தார். ஆஸ்திரேலிய அணிக்கு 48 ஓவரில் 267 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து அணி. வெற்றி இலக்கை விரட்டும் முனைப்பில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி, வார்னர், பான்கிராஃப்ட், உஸ்மான் கவாஜா ஆகிய மூவரின் விக்கெட்டையும் 47 ரன்களுக்கே இழந்துவிட்டது.  அப்படியான நிலையில் இறங்கி, 100 பந்துகளை எதிர்கொண்டு ஆடி, 59 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். கடைசி நாளில் திடீரென பேட்டிங் ஆடவேண்டிய சூழல் ஏற்பட்ட போதிலும், தனது பணியை மிகச்சரியாக செய்தார் லாபஸ்சாக்னே.