உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தோனிக்கு கையில் அடிபட்ட நிலையில், அதன்பின்னர் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அவர் ஆடினார். இந்நிலையில் இலங்கைக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் ஆடுவாரா மாட்டாரா என்ற தகவல் வெளியாகியுள்ளது.

உலக கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக ஆடிவருகிறது. லீக் சுற்றில் இலங்கைக்கு எதிரான கடைசி போட்டி எஞ்சியுள்ள நிலையில், இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியை தவிர வேறு எந்த போட்டியிலும் இந்திய அணி தோற்கவேயில்லை. 

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 338 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 306 ரன்கள் மட்டுமே எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அந்த போட்டியில் தோனியின் மந்தமான பேட்டிங் கடும் விமர்சனத்துக்குள்ளானது. வெற்றி பெறும் நோக்கில் தோனி பெரிய ஷாட் ஆட முயற்சிக்கவே இல்லை என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டார். 

அந்த போட்டியில் அவரது கையில் அடிபட்டது. அதை பொருட்படுத்தாமல் இன்னிங்ஸ் முழுவதையும் ஆடிய தோனி, போட்டி முடிந்த பின்னர், அடிபட்ட கை கட்டைவிரலை வாய்க்குள் விட்டு பின்னர் எச்சில் துப்பியபோது ரத்தமாக கொட்டியது. அதிலிருந்து அவரது கையில் அடிபட்டு இரத்தம் வந்ததும் அதை பொருட்படுத்தாமல் அவர் ஆடியதும் தெரியவந்தது. 

அது பெரிய காயம் இல்லாததால் அதன்பின்னர் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அவர் ஆடினார். இந்நிலையில், இலங்கைக்கு எதிரான போட்டி முக்கியமான போட்டி இல்லை என்பதால் அவர் ஆடுவாரா? அவரது காயம் குறித்த அப்டேட் ஆகிய தகவல்கள் தெரியாமல் ரசிகர்கள் அள்ளாடினர். இந்நிலையில், தோனி முழு உடற்தகுதியுடன் இருப்பதாகவும் அவர் கண்டிப்பாக இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. எனவே தோனி குறித்து ரசிகர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.