உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து தான் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் ஆக்ரோஷமாக ஆடி ஒருநாள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இந்த அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என பல முன்னாள் ஜாம்பவான்கள் கணித்துள்ளனர். ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகளும் வலுவாக உள்ளன. 

ஆஃப்கானிஸ்தான் அணி கலந்துகொள்ளும் இரண்டாவது உலக கோப்பைதான் இது. உலக கோப்பைக்கு அந்த அணி கத்துக்குட்டியாக இருந்தாலும் சமீபகாலமாக அந்த அணி ஆடிவரும் ஆட்டம் அபாரமானது. ஆசிய கோப்பை தொடரில் கூட இந்திய அணியை வெற்றி பெறவிடாமல் கடைசி பந்தில் கட்டுப்படுத்தி போட்டியை டிரா செய்தது. எனவே ஆஃப்கானிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிட முடியாது. ஆஃப்கானிஸ்தான் அணியும் செம டஃப் கொடுக்கும். 

உலக கோப்பை நெருங்கிய நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் மீதே கவனக்குவிப்பு உள்ளது. ஆனால் ஆஃப்கானிஸ்தான் அணி இந்த உலக கோப்பையில் பல பெரிய அணிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழும் என எச்சரித்துள்ள கும்ப்ளே, ஆஃப்கானிஸ்தான் அணிக்கு முக்கியமான ஒரு ஆலோசனையையும் வழங்கியுள்ளார்.

ஆஃப்கானிஸ்தான் அணி குறித்து பேசிய கும்ப்ளே, ஆஃப்கானிஸ்தான் அணிதான் ஆசிய கோப்பையில் ஆடியதில் இரண்டாவது சிறந்த அணி. இந்தியாவுக்கு எதிரான போட்டியை டிரா செய்து பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணியை பதறடித்தது. ரஷீத் கான், முகமது நபி, முஜீபுர் ரஹ்மான் என சிறந்த வீரர்களை கொண்டுள்ளது ஆஃப்கான் அணி. அந்த அணியின் தொடக்க வீரர் ஷேஷாத் அபாயகரமான வீரர். அவர் எதிரணிக்கு நெருக்கடியை அதிகரிக்கக்கூடிய வீரர். இந்த உலக கோப்பையில் பல பெரிய அணிகளை ஆஃப்கானிஸ்தான் அணி அச்சுறுத்தும்.

அந்த அணி நல்ல பவுலிங் யூனிட்டை பெற்றுள்ளது. விக்கெட்டுகளை வீழ்த்தும் திறன் வாய்ந்த ஸ்பின்னர்களை அணியில் பெற்றுள்ளது. எனவே டாஸ் ஜெயிக்கும்பட்சத்தில் சேஸிங் தேர்வு செய்யாமல் முதலில் பேட்டிங் ஆடி முடிந்தவரை அதிகமாக ஸ்கோர் செய்ய முனைய வேண்டும். 260-270 ரன்களை ஆஃப்கானிஸ்தான் அணி சேர்த்தால், அந்த அணியால் எதிரணிக்கு சவால் அளிக்க முடியும். எனவே முதலில் பேட்டிங் ஆடுவதுதான் அந்த அணியின் சிறந்த கேம் பிளானாக இருக்கும் என்று கும்ப்ளே தெரிவித்துள்ளார்.