இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனுமான குமார் சங்கக்கரா, 2000ம் ஆண்டிலிருந்து 2015 வரை இலங்கை அணியில் ஆடினார். 15 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய குமார் சங்கக்கரா, தனது கெரியரில் நிறைய சாதனைகளையும் தனது அணிக்கு நிறைய வெற்றிகளையும் பெற்றுக்கொடுத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் சங்கக்கரா இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 28,016 ரன்களை குவித்துள்ள சங்கக்கரா, ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன்களில் முக்கியமானவர். தனது கெரியரில் பெரியளவில் ஃபார்ம் அவுட் ஆகாமல், கெரியர் முழுக்க சிறப்பாக ஆடியவர் சங்கக்கரா. 

134 டெஸ்ட், 404 ஒருநாள் மற்றும் 56 டி20 போட்டிகளில் முறையே 12400, 14234 மற்றும் 1382 ரன்களை அடித்துள்ளார். இந்த தலைமுறை இளம் வீரர்கள் பலருக்கு பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் ஆகிய இரண்டிலும் ஹீரோவாக திகழும் சங்கக்கரா, தனது இளமைக்காலத்தில் தான் பார்த்து வளர்ந்த கிரிக்கெட் வீரர்களில் தனக்கு பிடித்த பேட்டிங் ஹீரோக்கள் யார் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த சங்கக்கரா, விவியன் ரிச்சர்ட்ஸை ரொம்ப பிடிக்கும். பிரயன் லாரா வந்த பின்னர், இருவரையும் பிடிக்கும். விவியன் ரிச்சர்ட்ஸும், பிரயன் லாராவும் தான் என்னுடைய பேட்டிங் ஹீரோக்கள். 1996ல் இலங்கை அணி உலக கோப்பையை வென்றபோதுதான், சர்வதேச கிரிக்கெட்டிலும் ஆட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது என்று சங்கக்கரா தெரிவித்துள்ளார்.