இங்கிலாந்து அணியின் சீனியர், நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன், பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் 600 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார். இந்த மைல்கல்லை எட்டும் முதல் ஃபாஸ்ட் பவுலர் என்ற வரலாற்று சாதனையை ஆண்டர்சன் படைத்தார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் இவருக்கு முன் இந்த மைல்கல்லை எட்டியுள்ள முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன், அனில் கும்ப்ளே ஆகிய மூவருமே ஸ்பின்னர்கள். ஆண்டர்சன் தான் 600 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டி வரலாற்று சாதனை படைத்த முதல் ஃபாஸ்ட் பவுலர். ஒரு ஃபாஸ்ட் பவுலராக இந்த மைல்கல்லை எட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல. ஏனெனில் ஃபாஸ்ட் பவுலர்கள் ஃபிட்னெஸை பராமரிப்பது மிகக்கடினம். மிகக்குறைவான ஃபாஸ்ட் பவுலர்களே 15 ஆண்டுகளுக்கு மேல் சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சியுள்ளனர். அவர்களில் ஒருவர் இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன். 

இந்த சாதனையை இனிமேல் யாராலும் எட்டமுடியாது என்று இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும் ஆல்டைம் பெஸ்ட் கிரிக்கெட் வீரர்களில் ஒருவருமான குமார் சங்கக்கரா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆங்கில ஊடகத்தில் கருத்து தெரிவித்த சங்கக்கரா, இப்போதைய மற்றும் எதிர்காலத்தில் வரவுள்ள ஃபாஸ் பவுலர்களுக்கு ஆண்டர்சன் மிகக்கடினமான இலக்கை செட் செய்துள்ளார். ஆண்டர்சனை களத்திற்கு வெளியே இருந்து ரசித்து பார்ப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. ஆண்டர்சனின் இந்த சாதனையை இனிமேல் யாராலும் எட்டமுடியாது என்று சங்கக்கரா தெரிவித்துள்ளார்.

2002ம் ஆண்டு இங்கிலாந்து ஒருநாள் அணியில் அறிமுகமான ஜேம்ஸ் ஆண்டர்சன், 2003ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக வீசி அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவதுடன், இங்கிலாந்து அணியின் மேட்ச் வின்னராக உருவெடுத்தார் ஆண்டர்சன். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்டகாலம் ஆடுவதற்கு தனது ஃபிட்னெஸை பராமரிக்கும் விதமாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிலிருந்து 2015ம் ஆண்டே ஒதுங்கினார். அதன்பின்னர் அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஆடாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்திவருகிறார். 

அதன் விளைவாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஃபாஸ்ட் பவுலர் என்ற க்ளென் மெக்ராத்தின் சாதனையை முறியடித்த ஆண்டர்சன், பாகிஸ்தானுக்கு எதிராக அண்மையில் முடிந்த கடைசி டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், 600 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் ஃபாஸ்ட் பவுலர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.