இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது நிதானமான அணுகுமுறையால் கூல் கேப்டன் என பெயர் பெற்றவர். இக்கட்டான நேரங்களிலும் சரி, வீரர்கள் தவறிழைக்கும் போதும் சரி, தோனி கோபமோ பதற்றமோ படமாட்டார். வீரர்களை ஊக்குவித்து அவர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை பெற்று போட்டியை வென்றுவிடுவார். வீரர்களை கையாள்வதில் தோனி வல்லவர்.

போட்டி குறித்த அறிவும் தெளிவும் பெற்ற தோனிக்கு, அவர் இளம் வீரராக இருக்கும்போதே போட்டியின் போக்கு குறித்த தெளிவு மிக்கவராக இருந்தார். பீல்டிங் அமைப்பு, பவுலர்களுக்கு அறிவுரை, கள வியூகம் என அனைத்திலுமே தோனி வல்லவர். ஒரு கேப்டனாக இந்திய அணிக்கு பெரும் பங்காற்றியுள்ள தோனி மூன்று விதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்தவர்.

தோனி கேப்டன்சியிலிருந்து விலகிய பிறகும், கேப்டன் கோலி, ரோஹித் என இருவருமே தோனியின் ஆலோசனையை மீறி செயல்படமாட்டார்கள். நெருக்கடியான நேரங்களில் இளம் ஸ்பின்னர்களான சாஹல் மற்றும் குல்தீப்பிற்கு எப்படி பந்துவீச வேண்டும் என்ற ஆலோசனைகளை வழங்கி அவர்களை மெருகேற்றியுள்ளார். 

அப்படியிருக்கையில் தோனியின் பேச்சை மதிக்காமல் செயல்பட்டதற்காக தன்னை தோனி திட்டிய சம்பவம் குறித்து குல்தீப் யாதவ் பகிர்ந்துள்ளார். கொரோனா ஊரடங்கால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், இன்ஸ்டாகிராமில் ஒரு பேட்டியில் பேசிய குல்தீப், தோனி தன்னை கடிந்துகொண்ட சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய குல்தீப் யாதவ், 2017ல் இந்தூரில் நடந்த இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் நான் வீசிய பந்து ஒன்றை குசால் பெரேரா கவர் திசையில் பவுண்டரி அடித்தார். இதையடுத்து ஃபீல்டிங்கை மாற்றியமைக்குமாறு விக்கெட் கீப்பிங் செய்துகொண்டிருந்த தோனி(bhai) அறிவுறுத்தினார். ஆனால் அவர் சொன்னதை நான் கேட்கவில்லை. அதன்விளைவாக, நான் வீசிய அடுத்த பந்தை ஸ்வீப் ஷாட் மூலம் பவுண்டரி அடித்தார் குசால் பெரேரா,

இதையடுத்து கோபமாக என்னிடம் வந்த தோனி, நான் 300 போட்டிகளில் ஆடியிருக்கேன்.. என் பேச்சை நீ கேட்கமாட்டீயா என்று கோபமாக கேட்டுவிட்டு சென்றுவிட்டார். அந்த போட்டி முடிந்த பின்னர், தோனியிடம் சென்று பேச எனக்கு பயமாகவும்  தயக்கமாவும் இருந்தது. அவர் இன்னும் என் மேல் கோபமாக இருப்பாரோ என்று நினைத்தேன். 

ஒருவழியாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, நீங்கள் எப்போதாவது கோபப்பட்டிருக்கிறீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர், நான் கடந்த 20 ஆண்டுகளாகவே கோபப்பட்டதில்லை என்று சொன்னதாக குல்தீப் தெரிவித்துள்ளார்.

குல்தீப் அந்த சம்பவத்திற்கு பின்னரும் கூட, பல முறை தோனியின் பேச்சை கேட்காமல் செயல்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது,