இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி ஹாமில்டனில் இன்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ஷ்ரேயாஸ் ஐயரின் அபார சதம் மற்றும் கேஎல் ராகுலின் அதிரடியான அரைசதம் ஆகியவற்றின் விளைவாக 50 ஓவரில் 347 ரன்களை குவித்தது. 

இந்த போட்டியில், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார் ஷ்ரேயாஸ் ஐயர். இந்திய அணியின் 4ம் வரிசை சிக்கலுக்கு தீர்வாக அமைந்த ஷ்ரேயாஸ் ஐயர், தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவரும் நிலையில், இன்றைய போட்டியில் சதமடித்து அசத்தினார். 5ம் வரிசையில் இறங்கிய கேஎல் ராகுல், அதிரடியாக ஆடி 64 பந்தில் 88 ரன்களை விளாசினார். இவர்களின் அதிரடியான பேட்டிங்கால் 50 ஓவரில் 347 ரன்களை விளாசியது இந்திய அணி. 

348 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஹென்ரி நிகோல்ஸ், அனுபவ வீரர் ரோஸ் டெய்லர், கேப்டன் டாம் லேதம் ஆகிய மூவரின் அதிரடியான பேட்டிங்கால் 49வது ஓவரிலேயே இலக்கை எட்டி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய டெய்லர் சதமடித்து அசத்தினார். 109 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று, நியூசிலாந்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். பும்ராவும் ஷமியும் மட்டுமே இந்த போட்டியில் ஓரளவிற்கு கட்டுக்கோப்பாக வீசினர். ஜடேஜாவும் பரவாயில்லை. இவர்கள் மூவரும் 10 ஓவர்கள் வீசிய நிலையில், கிட்டத்தட்ட பந்துக்கு நிகரான ரன்களையே விட்டுக்கொடுத்தனர். இந்த போட்டியில் நியூசிலாந்தின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தது, குல்தீப் மற்றும் ஷர்துல் தாகூரின் பவுலிங் தான். 

குல்தீப் யாதவ் மற்றும் ஷர்துல் தாகூரின் பவுலிங்கை அடித்து துவம்சம் செய்தனர் நியூசிலாந்து வீரர்கள். அவர்கள் வழங்கிய கூடுதல் ரன்கள் தான் நியூசிலாந்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. குல்தீப் யாதவ் 84 ரன்களையும் ஷர்துல் தாகூர் 80 ரன்களையும் வழங்கினர். குல்தீப் யாதவ் 10 ஓவர்கள் வீசி 84 ரன்களையும் ஷர்துல் தாகூர் வெறும் 9 ஓவரிலேயே 80 ரன்களையும் வாரி வழங்கினர்.

இந்த போட்டியில் 84 ரன்களை வாரி வழங்கியதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய ஸ்பின்னரின் மோசமான பந்துவீச்சு பட்டியலில் குல்தீப் யாதவ் இணைந்துள்ளார். ஒருநாள் போட்டி ஒன்றில், அதிகமான ரன்களை வழங்கிய இந்திய ஸ்பின்னர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் குல்தீப் யாதவ்.

கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சாஹல் வழங்கிய 88 ரன்கள் தான், ஒருநாள் போட்டியில் இந்திய ஸ்பின்னரால் வழங்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் ஆகும். அவருக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் பியூஷ் சாவ்லா உள்ளார். 2008ல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பியூஷ் சாவ்லா 85 ரன்களை வழங்கியுள்ளார். தற்போது இந்த போட்டியில் 84 ரன்களை வாரி வழங்கிய குல்தீப் யாதவ் மூன்றாமிடத்தை பிடித்துள்ளார்.