கர்நாடகா பிரீமியர் லீக் தொடர் நடந்துவருகிறது. இதில் பெல்லாரி டஸ்கர்ஸ் மற்றும் ஷிவமோக லயன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற பெல்லாரி டஸ்கர்ஸ் அணி, முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர் அபிஷேக் ரெட்டி 16 பந்துகளில் 34 ரன்கள் அடித்தார். கேப்டன் கௌதம் 14 பந்துகளில் வெறும் 13 ரன்கள் மட்டுமே அடித்தார். அதன்பின்னர் மூன்றாம் வரிசையில் இறங்கிய கிருஷ்ணப்பா கௌதம், எதிரணியின் பவுலிங்கை தாறுமாறாக அடித்து துவம்சம் செய்தார். 

யார் வந்து பந்து போட்டாலும் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வானவேடிக்கை நிகழ்த்தினார். வெறும் 56 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 13 சிக்ஸர்களுடன் 134 ரன்களை குவித்து மிரட்டினார். கிருஷ்ணப்பா கௌதமின் பேட்டிங் அபாரமாக இருந்தது. அவரது அதிரடியால் பெல்லாரி டஸ்கர்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 203 ரன்களை குவித்தது. 

204 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஷிவமோகா லயன்ஸ் அணி 133 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பேட்டிங்கில் தெறிக்கவிட்ட கௌதம், பவுலிங்கிலும் அசத்தினார். 4 ஓவர்கள் வீசி வெறும் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

ஒரு டி20 போட்டியில் சதமும் அடித்து 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அபாரமன ஆல்ரவுண்ட் பெர்ஃபார்மென்ஸ் யாருமே செய்ததில்லை.