இந்திய அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் ஃபிசியோதெரபிஸ்ட், வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் ஆகியோருக்கான பதவிக்காலம் முடிந்த நிலையில், புதியவர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை பிசிசிஐ பெற்றது. 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரியே நியமிக்கப்பட்டார். பேட்டிங் பயிற்சியாளராக இருந்த சஞ்சய் பங்கார் நீக்கப்பட்டு புதிய பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். பவுலிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்களாக முறையே பரத் அருண் மற்றும் ஸ்ரீதரே தொடர்கின்றனர். 

ஃபிசியோ, வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் ஆகியோருக்கான தேர்வு இன்னும் முடிவடையவில்லை. வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளருக்கான நேர்காணல் 5 பேரிடம் நடத்தப்பட்டது. இந்த 5 பேரில் மூவர் வெளிநாட்டினர். லூக் உட்ஹவுஸ், க்ராண்ட் லூடன் மற்றும் நிக் வெப் ஆகிய மூவரும் வெளிநாட்டினர். இவர்கள் தவிர ரஜினிகாந்த் சிவஞானன் மற்றும் ஆனந்த் ஆகிய இருவரும் இந்தியர்கள்.

இவர்களிடம் நடத்தப்பட்ட நேர்காணலின் அடிப்படையில், வெளிநாட்டினர் மீது தேர்வுக்குழுவும் பிசிசிஐ-யும் அதிக திருப்தியடைந்துள்ளது. ஆனால் இதுகுறித்து கருத்து கேட்டபோது, பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் கேப்டன் கோலியும் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளனர். இந்தியர் ஒருவரை நியமிக்குமாறு ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், வெளிநாட்டவராக இருந்தாலும் பரவாயில்லை, யார் சிறந்தவராக இருக்கிறாரோ அவரை தேர்வு செய்யுமாறு கோலி தனது கருத்தை அதிரடியாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளரை நியமிப்பதில் சாஸ்திரி மற்றும் கோலி இடையே மாறுபட்ட கருத்து நிலவுகிறது.