ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. 

எஞ்சிய 2 இடத்திற்கான போட்டி கடுமையாக உள்ள நிலையில், நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் 212 ரன்களை குவித்த சன்ரைசர்ஸ் அணி, பஞ்சாப் அணியை 167 ரன்களில் சுருட்டி 45 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றது. 

பஞ்சாப் அணியில் மிடில் ஆர்டர்கள் தொடர்ச்சியாக சொதப்பிவருகின்றனர். ராகுல், கெய்ல், மயன்க் அகர்வால் ஆகிய 3 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களையே அந்த அணி அதிகமாக சார்ந்திருக்கிறது. கடந்த சீசனில் அபாரமாக ஆடிய ராகுல், இந்த சீசனிலும் நன்றாக ஆடிவருகிறார். 12 போட்டிகளில் ஆடி 520 ரன்களுடன் இதுவரை இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் வார்னருக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். 

ஆனால் ராகுலின் ஆட்டம் அந்த அணியின் வெற்றிக்கு பயன்படுவதில்லை. ராகுல் நன்றாக ஆடினாலும் அவரது இன்னிங்ஸால் அணி வெற்றி பெறுவதில்லை. இன்னிங்ஸின் தொடக்கத்தில் நிதானமாக தொடங்கி பின்னர் அதிரடியாக ஆடுகிறார். 

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அப்படித்தான் ஆடினார். முதல் 36 பந்துகளில் வெறும் 39 ரன்கள் மட்டுமே அடித்த ராகுல், அடுத்த 20 பந்துகளில் 40 ரன்களை குவித்து 56 பந்துகளில் 79 ரன்களை குவித்திருந்தார். ஆனால் தொடக்கத்தில் அவர் அதிகமான பந்துகள் எடுத்துக்கொள்வதால் அணிக்கு நெருக்கடி அதிகரிக்கிறது. இதனை சுட்டிக்காட்டும் விதமாக கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே, ராகுல் விரைவில் அடித்து ஆட வேண்டும் என டுவீட் செய்திருந்தார். 

தான் மிகவும் மந்தமாக தொடங்குவதாக ஹர்ஷா போக்ளே விமர்சித்திருந்ததற்கு பதிலடி கொடுத்துள்ளார் ராகுல். இதுகுறித்து பேசிய ராகுல், எப்போதுமே ஒரு பேட்ஸ்மேனால் அதிரடியாகவே தொடங்க முடியாது. 20 பந்துகளில் எப்போதுமே அரைசதம் அடிப்பது என்பது சாத்தியமற்றது. நான் நிதானமாக தொடங்கினாலும் பின்னர் அதிரடியாக அடித்து அதை சமன் செய்துவிடுவேன் என்று ராகுல் தெரிவித்துள்ளார்.