உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. இன்னும் 13 நாட்களே உள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

1992ம் ஆண்டுக்கு பிறகு இந்த உலக கோப்பை தொடரில் தான் லீக் சுற்றில் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோதுகின்றன. அதனால் ரசிகர்கள் அதீத ஆர்வத்தில் உள்ளனர். இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகளும் வலுவாக உள்ளன. இந்திய அணியை பொறுத்தமட்டில் டாப் ஆர்டர் பேட்டிங் மற்றும் பவுலிங் அபாரமாக உள்ளது. மிடில் ஆர்டரில் நான்காம் வரிசையில் விஜய் சங்கர் அல்லது ராகுல் இறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

4ம் வரிசை பேட்டிங்கிற்கு இவர்கள் இருவரில் ஒருவரை இறக்கலாம் என்பதன் அடிப்படையில்தான் அணி தேர்வே அமைந்திருந்தது. அதனால் இருவரில் யார் இறக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆடும் லெவனில் ஒரு பவுலிங் ஆப்சன் கூடுதலாக தேவை என்கிறபட்சத்தில் விஜய் சங்கரும் இல்லையென்றால் கேஎல் ராகுலும் இறக்கப்படுவார். 

உலக கோப்பை நெருங்கிய நிலையில், பல முன்னாள் வீரர்களும் இன்னும் நான்காம் வரிசை பேட்டிங் குறித்த தங்களது கருத்தை தெரிவித்துவருகின்றனர். ராகுலை இறக்க வேண்டும் என காம்பீர் மற்றும் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் திலீப் வெங்சர்க்கார் ஆகிய இருவரும் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர். எந்த பேட்டிங் வரிசையையும் இன்னாருக்குத்தான் என்று உறுதி செய்யாமல் சூழலுக்கு தகுந்தவாறு வீரர்களை இறக்க வேண்டும் என்று கபில் தேவ் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ராகுல் அளித்த பேட்டியில், நான்காம் வரிசை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராகுல், அணி நிர்வாகத்திற்கு போதுமான ஆப்சன் வழங்கப்பட்டிருப்பதை தேர்வுக்குழு தெளிவாக்கியுள்ளது. நான் அணியில் இருக்கிறேன். எனவே அணி நிர்வாகம் என்ன முடிவெடுத்தாலும் அதை ஏற்று சிறப்பாக செயல்படுவேன் என்று ராகுல் தெரிவித்துள்ளார்.