இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணியுடன் 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆடுகிறது. 

இந்த தொடரின் முதல் 2 டி20 போட்டிகள் மட்டும் அமெரிக்காவில் நடக்கிறது. முதல் டி20 போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் ராகுலுக்காக ஒரு சாதனை காத்திருக்கிறது. ஆனால் அதை செய்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இதுவரை 24 டி20 இன்னிங்ஸ்களில் ஆடி 879 ரன்களை குவித்துள்ளார் ராகுல். ராகுல் டி20 கிரிக்கெட்டில் 1000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்ட இன்னும் 121 ரன்கள் தேவை.

ராகுல் இந்த போட்டியில் 121 ரன்கள் அடித்தால் டி20 கிரிக்கெட்டில் விரைவில் 1000 ரன்களை எட்டிய வீரர் என்ர சாதனையை படைப்பார். இதற்கு முன்னதாக பாபர் அசாம் 26 டி20 இன்னிங்ஸ்களில் 1000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். விராட் கோலி 27வது இன்னிங்ஸில் 1000 ரன்களை அடித்தார். எனவே ராகுல் இன்றைய போட்டியில் 121 ரன்கள் அடித்தால் 25 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை படைப்பார்.