டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடக்கும் போட்டியில் கேகேஆரும் டெல்லி கேபிடள்ஸும் மோதுகின்றன.
டெல்லி கேபிடள்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தான், இப்போது கேகேஆர் அணியின் கேப்டனாக இருந்து அந்த அணியை வழிநடத்துகிறார். இந்த சீசனில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கேகேஆர் அணி மிகச்சிறப்பாக விளையாடி வெற்றிகளை குவித்துவருகிறது. ஏற்கனவே ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன் ஆகிய மேட்ச் வின்னர்கள் அணியில் அசத்திவந்த நிலையில், மும்பைக்கு எதிரான போட்டியில் 14 பந்தில் அரைசதம் அடித்து பாட் கம்மின்ஸ் கேகேஆர் அணிக்கு வலுசேர்த்துள்ளார். அவரது வருகை கேகேஆர் அணிக்கு கூடுதல் பலமாக அமையும்.
அதேவேளையில், இந்த சீசனின் முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும், அதன்பின்னர் தோல்விகளை தழுவிய டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு இந்த போட்டி முக்கியமானது.
டெல்லி ப்ரபோர்ன் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளார். கேகேஆர் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் கேகேஆர் அணி களமிறங்கியுள்ளது.
கேகேஆர் அணி:
அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், உமேஷ் யாதவ், ராசிக் சலாம், வருண் சக்கரவர்த்தி.
டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் பவுலர் அன்ரிக் நோர்க்யா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கலீல் அகமது சேர்க்கப்பட்டுள்ளார்.
டெல்லி கேபிடள்ஸ் அணி:
பிரித்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், சர்ஃபராஸ் கான், லலித் யாதவ், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், கலீல் அகமது.
