ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளையுடன் லீக் சுற்று முடிவடைந்து 7ம் தேதி முதல் பிளே ஆஃப் தொடங்குகிறது. 

சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 3 அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன. எஞ்சிய ஒரு இடத்தை பிடிப்பதற்கு கேகேஆர், சன்ரைசர்ஸ், பஞ்சாப் அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது. நேற்றைய போட்டியில் தோற்றதை அடுத்து இந்த போட்டியிலிருந்து பஞ்சாப் அணி விலகிவிட்டது. 

வெற்றி கட்டாயத்துடன் கேகேஆர் மற்றும் பஞ்சாப் அணிகள் நேற்றைய போட்டியில் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் அணி நிர்ணயித்த 184 ரன்கள் என்ற இலக்கை 18வது ஓவரிலேயே எட்டி அபார வெற்றி பெற்றது கேகேஆர். இதன்மூலம் பிளே ஆஃபிற்கு தகுதிபெறும் வாய்ப்பை கேகேஆர் அணி தக்கவைத்துள்ளது. பஞ்சாப் அணி வெளியேறிவிட்டது. 

இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் பேட்டிங்கின்போது முதல் ஸ்ட்ராடஜிக் டைம் அவுட் பிரேக்கில், கேகேஆர் வீரர்களிடம் கடும் கோபத்துடன் ஆக்ரோஷமாக பேசினார் கேப்டன் தினேஷ் கார்த்திக். பொறுமை மற்றும் நிதானம் ஆகியவற்றின் அடையாளமாக அறியப்பட்ட தினேஷ் கார்த்திக், வீரர்களிடம் கடும் கோபமாக பேசியது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தினேஷ் கார்த்திக் வீரர்களிடம் கோபமாக பேசியபோது, தலைமை பயிற்சியாளர் ஜாக் காலிஸ், அமைதியாக அவருக்கு பின்னால் நின்றார். 

அதுமட்டுமல்லாமல் ஃபீல்டிங் செட்டப்பின்போதும் சற்று கோபமாகவே காட்சியளித்தார் தினேஷ் கார்த்திக். இந்நிலையில், போட்டி முடிந்ததும் தான் கோபப்பட்டதற்கான காரணத்தை தெரிவித்தார் தினேஷ் கார்த்திக். இதுகுறித்து பேசிய தினேஷ் கார்த்திக், போட்டியின் இடையே வீரர்களின் அணுகுமுறை எனக்கு அதிருப்தியளித்தது. (பவுலர்களும் ஃபீல்டர்களும் நம்பிக்கையிழந்து அலட்சியமாக ஆடியதுபோல தெரிந்தது என்பதை குறிப்பிட்டார்.) எனவே அந்த நேரத்தில் நான் என்ன நினைக்கிறேன் என்பதை வீரர்களிடம் தெரிவிக்க வேண்டியது அவசியம். என்னை யாரும் கோபமாக பார்த்திருக்கவே மாட்டார்கள். எனினும் வீரர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவர கோபப்பட வேண்டி வருமேயானால் கோபப்படுவேன் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.