ஐபிஎல் 15வது சீசனிலிருந்து விலகிய அலெக்ஸ் ஹேல்ஸுக்கு மாற்று வீரரை ஒப்பந்தம் செய்துள்ளது கேகேஆர் அணி. 

ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகள் புதிதாக களமிறங்குகின்றன. அதனால் 10 அணிகளும் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு, லீக் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

2 முறை சாம்பியனான கேகேஆர் அணி, ஏலத்திற்கு முன்பாக ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய நால்வரையும் தக்கவைத்த நிலையில், மெகா ஏலத்தில் ஷ்ரேயாஸ் ஐயரை ரூ.12.25 கோடிக்கு எடுத்து அவரை கேப்டனாக நியமித்துள்ளது.

மேலும் ஏலத்தில் அஜிங்க்யா ரஹானே, நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ், பாட் கம்மின்ஸ், ஷிவம் மாவி, உமேஷ் யாதவ், பாபா இந்திரஜித், சாமிகா கருணரத்னே, அலெக்ஸ் ஹேல்ஸ், டிம் சௌதி, அனுகுல் ராய் உள்ளிட்ட வீரர்களையும் ஏலத்தில் எடுத்தது.

அலெக்ஸ் ஹேல்ஸ் விலகல்:

ஐபிஎல் 14வது சீசனில் ஃபைனல் வரை சென்ற கேகேஆர் அணி, 15வது சீசனை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள நிலையில், அந்த அணியில் எடுக்கப்பட்டிருந்த இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், 2 மாதம் பபுளில் இருக்கமுடியாது என்று கூறி ஐபிஎல்லில் இருந்து விலகினார்.

ஆரோன் ஃபின்ச் சேர்ப்பு:

இந்நிலையில், அவருக்கு மாற்று வீரராக ஆஸ்திரேலிய அணியின் டி20 கேப்டனும் அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேனுமான ஆரோன் ஃபின்ச்சை அவரது அடிப்படை விலையான ரூ.1.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது கேகேஆர் அணி. ஆரோன் ஃபின்ச்சை ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த அணியும் வாங்க முன்வராததை அடுத்து, அவர் விலைபோகவில்லை. இந்நிலையில் தான், அலெக்ஸ் ஹேல்ஸுக்கு மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ஆரோன் ஃபின்ச்.