ஐபிஎல் 12வது சீசனின் லீக் சுற்றின் கடைசி போட்டியில் மும்பை இந்தியன்ஸும் கேகேஆரும் ஆடிவருகின்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்துவரும் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா, பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் ரன்களை குவிக்க சற்று தடுமாறினாலும் மற்றொரு தொடக்க வீரரான கிறிஸ் லின் அதிரடியாக ஆடினார்.

ஷுப்மன் கில்லை 9 ரன்களில் வீழ்த்திய ஹர்திக் பாண்டியா, அதேஓவரில் லின்னையும் வீழ்த்தினார். அதன்பின்னர் ஆட்டம் முழுவதுமாக மும்பை இந்தியன்ஸின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. தினேஷ் கார்த்திக்கை 3 ரன்களில் வீழ்த்திய மலிங்கா, அதே ஓவரில் ஆண்ட்ரே ரசலை கோல்டன் டக் அவுட்டாக்கி அனுப்பினார். 

மூன்றாம் வரிசையில் களமிறங்கிய உத்தப்பா கடைசி ஓவர் வரை களத்தில் இருந்தார். ஆனால் மிக மோசமாக ஆடினார். இன்னிங்ஸ் முழுவதுமே மந்தமாக ஆடினார் உத்தப்பா. 24 பந்துகளுக்கும் மேலாக ரன்னே அடிக்காமல் டாட் பந்தாக்கினார் உத்தப்பா. 47 பந்துகளை எதிர்கொண்டு 40 ரன்கள் மட்டுமே அடித்தார். கேகேஆர் அணியின் மோசமான பேட்டிங்கால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம் மற்றும் சிறிய மைதானமான மும்பை வான்கடே மைதானத்தில் 134 ரன்கள் என்பது எளிய இலக்கு. எனவே மும்பை வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிப்பது உறுதியாகிவிட்டது.