கொல்கத்தாவில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய ஐபிஎல் ஏலத்தில், முதல் வீரராக கிறிஸ் லின் ஏலத்தில் விடப்பட்டார். அவரது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி அவரை எடுத்தது. கிறிஸ் லின்னை எடுக்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. கடந்த சீசனில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத லின்னை கழட்டிவிட்டது கேகேஆர். இந்நிலையில், அவரை மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்துள்ளது. 

அதற்கடுத்து இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் ஏலம் விடப்பட்டார். ஒன்றரை கோடி அடிப்படை விலையை கொண்ட இயன் மோர்கனை எடுக்க, கேகேஆர் அணியும் டெல்லி கேபிடள்ஸ் அணியும் மிகுந்த ஆர்வம் காட்டின. மோர்கனை எடுக்க, இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. 

கேகேஆர் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் மீது திருப்தியில்லாததால் புதிய கேப்டனுக்கான தேவை அந்த அணியில் இருந்தது. எனவே மோர்கனை எடுப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டிய கேகேஆர் அணி, ரூ. 5 கோடியே 25 லட்சத்துக்கு மோர்கனை எடுத்தது. 

ஜேசன் ராயை கழட்டிவிட்ட டெல்லி கேபிடள்ஸ் அணியே அவரை, அவரது அடிப்படை விலையான ஒன்றரை கோடிக்கு எடுத்தது. ஹனுமா விஹாரி மற்றும் புஜாரா ஆகிய டெஸ்ட் வீரர்களை எந்த அணியும் அடிப்படை விலைக்குக்கூட எடுக்க முன்வரவில்லை. இரண்டாம் கட்ட ஏலத்தில் அணிகளிடம், பணம் இருந்தால் கடைசியில் ஹனுமா விஹாரி எடுக்கப்பட வாய்ப்பிருக்கிறது.