Zoom Callல் நேர்காணலுக்கு வந்த கவுதம் காம்பீர் – முதல் சுற்று ஓவர், நாளை 2ஆவது சுற்று நேர்காணல்!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருக்கான பதவிக்கு கவுதம் காம்பீர் விண்ணப்பித்திருந்த நிலையில் இன்று பிற்பகல் நடைபெற்ற நேர்காணலில் Zoom Callல் முதல் ரவுண்டை முடித்துள்ளார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் வரும் 29 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தான், தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள கவுதம் காம்பீர் தயாராக இருப்பதாக தகவல் வெளியானது. அவர் மட்டுமே இந்த பதவிக்கு விண்ணப்பித்திருப்பதாகவும் கூறப்பட்டது.
நடந்து முடிந்த ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆலோசகராக செயல்பட்ட கவுதம் காம்பீர் அந்த அணி சாம்பியன் பட்டம் பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். இதைத் தொடர்ந்து தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கவுதம் காம்பீர் தான் சரியான தேர்வாக இருப்பார் என்று பிசிசிஐ கருதியது.
எனினும், மற்ற ஐபிஎல் பயிற்சியாளர்களான ஸ்டீபன் ஃப்ளெமிங் மற்றும் ஆண்டி ஃப்ளவர் ஆகியோரது பெயரும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருக்கான பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். கவுதம் காம்பீர் தான் அதற்கான தேர்வில் முன்னிலையில் இருந்தார். இந்த நிலையில் தான், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்த கவுதம் காம்பீருக்கு இன்று Zoom Callல் நேர்காணல் நடந்துள்ளது. இன்று முதல் சுற்று முடிந்த நிலையில் 2ஆவது சுற்று நாளை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீருக்கு பயிற்சியாளராக அனுபவம் இல்லை என்றாலும், கூட ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று கொடுத்துள்ளார். இதன் காரணமாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் பொறுப்பேற்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.