ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிந்து தகுதிச்சுற்று நாளை தொடங்குகிறது. 

மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய நான்கு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. இந்த சீசனை மிகவும் வெற்றிகரமாக தொடங்கிய கேகேஆர் அணி லீக் சுற்றின் இரண்டாம் பாதியில் படுமோசமாக சொதப்பி லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது. 

முதல் 5 போட்டிகளில் 4 வெற்றிகளை குவித்த கேகேஆர் அணி, அடுத்த 9 போட்டிகளில் வெறும் 2 வெற்றிகளை மட்டுமே பெற்று பரிதாபமாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. லீக் சுற்றின் கடைசி போட்டியில் வெற்றி கட்டாயத்துடன் மும்பை இந்தியன்ஸை எதிர்கொண்ட கேகேஆர் அணி, பவுலிங், பேட்டிங் என அனைத்திலுமே படுமோசமாக செயல்பட்டது. 

இந்த போட்டியில் வென்றால் பிளே ஆஃபிற்கு தகுதிபெறலாம் என்ற நிலை இருந்தது. அப்படி இருந்தும்கூட, கேகேஆர் அணி வீரர்கள் ஒன்றிணைந்து ஆடவில்லை. ஒரு அணி என்ற எண்ணமே இல்லாமல் அணிக்கு வெற்றி பெற்று கொடுக்க வேண்டும் என்பதுதான் இலக்கு என்பதை உணராமல் ஆடியதாகவே தெரிந்தது. 

ஆண்ட்ரே ரசல் அணியின் சூழல் சரியில்லை, தவறான முடிவுகள் எடுக்கப்படுகின்றன என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கடந்த சில தினங்களுக்கு முன் முன்வைத்திருந்தார். அதன்பின்னரே கேகேஆர் அணியில் பூகம்பம் வெடிக்க ஆரம்பித்தது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வீரர்களின் போக்கும் ஆட்டமும் உடல்மொழியும் சரியில்லாததால் கோபமடைந்த கேப்டன் தினேஷ் கார்த்திக், வீரர்களை கடிந்தார். அது மிகவும் வைரலானது. 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கேகேஆர் வீரர்கள் முழு ஈடுபாட்டுடன் உற்சாகமாக ஆடவில்லை. வேண்டா வெறுப்பாக ஆடியது அவர்கள் ஆடிய விதத்திலிருந்தே அறியமுடிந்தது. எப்படியோ விட்டால் சரி என்கிற ரீதியில் ஆடியதாகவே தெரிந்தது. எனவேதான் கேகேஆர் அணி தோற்றது. 

கேகேஆர் அணியின் ட்ரெஸ்ஸிங் ரூம் சூழல் சரியில்லை என்பதையும் வீரர்களுக்கு இடையே கருத்து முரண் இருப்பதையும் பரஸ்பர நல்லுறவு இல்லாததையும் களத்தில் அவர்களது செயல்பாடுகளே பட்டவர்த்தனப்படுத்தின. 

இந்நிலையில், அதை அந்த அணியின் பயிற்சியாளர் சைமன் கேடிச்சும் ஒப்புக்கொண்டுள்ளார். அணியில் பிரச்னை இருப்பதை மறைக்கவெல்லாம் முடியாது. ஆம் கேகேஆர் அணியில் பிரச்னை இருக்கிறது என்று ஓபனாக தெரிவித்துவிட்டார் சைமன் கேடிச்.