சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவர் சுனில் கவாஸ்கர். மிகச்சிறந்த பேட்டிங் டெக்னிக்கை கொண்ட சுனில் கவாஸ்கர், சர்வதேச கிரிக்கெட்டில் ரன்களை குவித்து இந்திய அணிக்காக மிகச்சிறந்த பங்காற்றியவர். இந்தியாவின் தலைசிறந்த இரண்டு பேட்ஸ்மேன்கள் என்று சொன்னால், சச்சினுக்கு சீனியர் என்றமுறையில் கவாஸ்கரின் பெயருக்கு பின்னால் தான் சச்சின் பெயர் சொல்லப்படும். அந்தளவிற்கு மிகச்சிறந்த பேட்ஸ்மேன். 

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் வீரர் கவாஸ்கர் தான். 125 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 51.12 என்ற சராசரி, 34 சதங்கள் மற்றும் 45 அரைசதங்களுடன் 10,122 ரன்களை குவித்தவர் கவாஸ்கர். 108 ஒருநாள் போட்டிகளில் ஆடி 3092 ரன்கள் அடித்துள்ளார். 

1980களில் ஆதிக்கம் செலுத்திய கிளைவ் லாயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராகவும் பல சிறப்பான இன்னிங்ஸ்களை ஆடி ரன்களை குவித்தவர் கவாஸ்கர். 

அப்பேர்ப்பட்ட சூப்பர் பேட்ஸ்மேனான கவாஸ்கர், வலைப்பயிற்சியில் படுமோசமாக பேட்டிங் ஆடுவாராம். அந்த தகவலை அவரது சக வீரரும் இந்திய அணியின் முன்னாள் வீரருமான கிரன் மோர் தெரிவித்துள்ளார். 

கவாஸ்கர் குறித்து பேசியுள்ள கிரன் மோர், வலைப்பயிற்சியில் நான் பார்த்த மோசமான பேட்ஸ்மேன்களில் ஒருவர் கவாஸ்கர். அவருக்கு வலையில் பயிற்சி செய்யவே பிடிக்காது. வலையில் அவர் பேட்டிங் செய்வதற்கும், டெஸ்ட் கிரிக்கெட்டில் களத்தில் இறங்கி ஆடுவதற்கும் சம்மந்தமே இருக்காது; முற்றிலும் வேற மாதிரி இருக்கும். வலையில் சரியாக ஆடமாட்டார். ஆனால் களத்தில் அசத்திவிடுவார் கவாஸ்கர் என்று கிரன் மோர் தெரிவித்துள்ளார்.

கவாஸ்கருக்கு கடவுள் கொடுத்த மிகச்சிறந்த பரிசு என்றால், அது அவரது கவனக்குவிப்பு தான். அவரது கூர்நோக்கு திறன் அபாரமானது. அவரை சுற்றி எத்தனை பேர் இருந்துகொண்டு என்னென்ன காரியங்கள் செய்தாலும், அவரது சிந்தனையிலும் செயல்பாட்டிலிருந்து அவரது கவனம் சிதறாது என்று கிரன் மோர் தெரிவித்தார்.