இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி என்றாலே, பரபரப்புக்கும் மோதல்களுக்கும் பஞ்சமிருக்காது. இரு அணிகளுமே வெற்றி வேட்கையுடன் கடுமையாக போராடுவார்கள். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி என்பது வெறும் விளையாட்டல்ல; அது உணர்வுப்பூர்வமான விஷயமாகவே அமைந்துவிட்டது. 

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் ஸ்லெட்ஜிங்குகள், சீண்டல்கள், மோதல்கள் ஆகியவை கடுமையாக இருக்கும். வெங்கடேஷ் பிரசாத் - ஆமீர் சொஹைல் இடையேயான 1996 உலக கோப்பை மோதல், ஷாகித் அஃப்ரிடி மற்றும் காம்ரான் அக்மலுடனான கம்பீரின் மோதல் ஆகியவை மிகப்பிரபலம். பெரும்பாலானோர் இதைப்பற்றி அறிந்திருப்பார்கள். 

ஆனால், இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிரன் மோர், பாகிஸ்தான் வீரருடனான தனது மோதல் குறித்து பகிர்ந்துள்ளார். 1989ல் இந்திய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஆடியபோது நடந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார். 

அந்த சம்பவம் குறித்து பேசியுள்ள கிரன் மோர், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி என்றாலே கண்டிப்பாக ஸ்லெட்ஜிங் நடக்கும். 1989ல் இந்திய அணி பாகிஸ்தான் சென்றபோது, கராச்சி டெஸ்ட்டில் சலீம் மாலிக்கை பஞ்சாபி மொழியில் மோசமான வார்த்தையை சொல்லி திட்டினேன். அவர் என்னை பேட்டால் அடிக்க வந்தார். பொதுவான மொழியில் பேசிக்கொள்வதால் இதுமாதிரியான சம்பவங்கள் எல்லாம் நடக்கும்ம் என்று கிரன் மோர் தெரிவித்துள்ளார்.