ஐபிஎல்லில் 12 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளாக திகழ்கின்றன. இந்த 2 அணிகளும் கோப்பைகளை அள்ளும் நிலையில், ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய மூன்று அணிகளும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. 

அந்த மூன்று அணிகளும் ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கி ஏமாற்றத்துடன் வெளியேறுகின்றன. முதல் கோப்பையை வெல்லும் முனைப்பில் ஒவ்வொரு ஆண்டும் அதிரடியான மாற்றங்களை இந்த அணிகள் மேற்கொண்டு வருகின்றன. 

ஆர்சிபி அணி கூட, தலைமை பயிற்சியாளரை மாற்றியுள்ளது. அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கேரி கிறிஸ்டன் மற்றும் பவுலிங் பயிற்சியாளராக இருந்த நெஹ்ரா ஆகிய இருவரையும் அதிரடியாக நீக்கிவிட்டது. தலைமை பயிற்சியாளராக சைமன் கேடிச்சையும் இயக்குநராக மைக் ஹெசனையும் நியமித்துள்ளது. 

இந்நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் அதிரடியான ஆக்‌ஷன்களை மேற்கொள்ளவுள்ளது. கடந்த 2 சீசன்களாக அந்த அணியை வழிநடத்திவந்த அஷ்வினை கேப்டன்சியிலிருந்து நீக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கேப்டன்சியிலிருந்து மட்டுமல்லாமல் அணியிலிருந்தே நீக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அவரை டெல்லி கேபிடல்ஸ் அல்லது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் டிரேடிங் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

2017 ஐபிஎல் சீசனில் அஷ்வினை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.7.8 கோடிக்கு எடுத்தது. அவரை கேப்டனாக நியமித்தது அப்போதைய அணியின் ஆலோசகர் சேவாக். அஷ்வின் நன்றாகத்தான் அணியை வழிநடத்தினார். ஆனாலும் கடந்த இரண்டு சீசன்களில் அந்த அணி பெரிதாக சோபிக்கவில்லை. இந்நிலையில், அஷ்வினை நீக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

அடுத்த கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்படலாம் எனவும் தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல, அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த மைக் ஹெசன், தற்போது ஆர்சிபி அணியின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதால், அந்த பொறுப்பிற்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்களான ஜார்ஜ் பெய்லி மற்றும் டேரன் லேமன் ஆகியோரிடம் பேச்சு நடத்தப்பட்டுவருகிறது.