ராகுல் டிராவிட் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். எந்தவிதமான சூழலிலும், எந்தவிதமான பவுலிங்கையும் எதிர்கொண்டு தடுப்பாட்டம் மற்றும் அதிரடி ஆட்டம் என அனைத்துவிதத்திலும் சிறப்பாக ஆடக்கூடிய சிறப்பான பேட்டிங் டெக்னிக்கையும் அபரிமிதமான மனவலிமையையும் பெற்றவர் ராகுல் டிராவிட். மிகச்சிறந்த பேட்ஸ்மேனான ராகுல் டிராவிட், தனது கெரியரில் ஒரு இன்னிங்ஸை கூட சுயநலமாக ஆடியதில்லை. இக்கட்டான சூழல்களில் பலமுறை இந்திய அணியை காப்பாற்றி வெற்றியை தேடிக்கொடுத்தவர் என்பதால் இந்திய அணியின் சுவர் என்றழைக்கப்படுகிறார்.

ராகுல் டிராவிட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணிகளின் பயிற்சியாளராக இருந்து நிறைய திறமையான இளம் வீரர்களை மெருக்கேற்றி, பக்குவப்படுத்தி இந்திய அணிக்கு கொடுத்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் ஆடிய காலத்திலேயே, தனது சமகால வீரர்களுக்கும் நிறைய பேட்டிங் அறிவுரைகளை வழங்கி மெருக்கேற்றியிருக்கிறார் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

ராகுல் டிராவிட்டின் அறிவுரையால் பயனடைந்த வீரர்கள் சொல்லும்போதே அதுகுறித்து அறிந்துகொள்ள முடிகிறது. பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் மிகச்சிறந்த பேட்ஸ்மேனுமான யூனிஸ் கான், இங்கிலாந்து கண்டிஷனில் சிறப்பாக ஆட, ராகுல் டிராவிட்டின் ஆலோசனை தனக்கு உதவிகரமாக இருந்ததாக ஏற்கனவே கூறியிருக்கிறார். 

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமான கெவின் பீட்டர்சனும் இடது கை ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் தனக்கு இருந்த சிக்கலை ராகுல் டிராவிட் தீர்த்துவைத்தது குறித்து ஏற்கனவே தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், அதை மறுபடியும் தெரிவித்துள்ளார்.

கெவின் பீட்டர்சன், ஷகிப் அல் ஹசன் உள்ளிட்ட இடது கை ஸ்பின்னர்களுக்கு எதிராக திணறிய சமயத்தில், ராகுல் டிராவிட் கூறிய ஆலோசனை குறித்து பேசியுள்ள பீட்டர்சன், டிராவிட் எனக்கு ஒரு அருமையான ஈ மெயில் அனுப்பியிருந்தார். அதில், ஸ்பின் பவுலிங்கை எதிர்கொள்வது எப்படியென்று விளக்கமாக எழுதியிருந்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்த முக்கியமான அம்சம், பந்தின் லெந்த்தை முடிந்தவரை விரைவில் கணித்துவிட வேண்டும் என்றும், அவசரப்படாமல் காத்திருந்து எப்படி ஆடுவது என்று முடிவெடுக்க வேண்டும் என்று ராகுல் டிராவிட் தெரிவித்திருந்ததாக பீட்டர்சன் கூறினார். 

கால்காப்பு கட்டாமல் ஸ்பின் பவுலிங்கை எதிர்கொண்டு பயிற்சி செய்தால், பந்து காலில் படுவதால் ஏற்படும் வலியை பொறுக்கமுடியாமல், தானாகவே பேட் காலுக்கு முன்னால் வேகமாக சென்றுவிடும் என்பதால் அப்படி ஆடி பயிற்சி எடுக்குமாறு டிராவிட் கூறியிருந்ததாக ஏற்கனவே பீட்டர்சன் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.