இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழ்ந்துவருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு மைல்கல்லை எட்டுகிறார். 

சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங்கில் செய்யப்பட்ட சாதனைகளை ஒவ்வொன்றாக முறியடித்து வரும் கோலி, ரன்களை குவித்துவருவதால் ரன் மெஷின் என்று அழைக்கப்படுகிறார். ராஞ்சியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய கோலி, ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 41வது சதத்தை பூர்த்தி செய்தார். அதற்கு முந்தைய போட்டியிலும் கோலி சதமடித்திருந்தார். 

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கருக்கு(49 சதங்கள்) அடுத்து அதிக சதங்கள் அடித்த வீரராக விராட் கோலி திகழ்கிறார். டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய போட்டிகளை எல்லாம் சேர்த்து ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதமடித்த வீரர்களின் பட்டியலில் சச்சின்(100 சதங்கள்), பாண்டிங்கிற்கு(71 சதங்கள்) அடுத்து 66 சதங்களுடன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் விராட் கோலி. 

ஒரு காலத்தில் சதமடிப்பது என்பது பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. சதங்கள் அரிதாகத்தான் அடிக்கப்பட்டன. ஆனால் விராட் கோலியோ அசால்ட்டாக போட்டிக்கு போட்டி சதமடித்துவருகிறார். அவரது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 49 அரைசதங்களை அடித்துள்ள கோலி, 41 சதங்களை விளாசியுள்ளார். கிட்டத்தட்ட அரைசதத்திற்கு நிகரான சதங்களை விளாசியுள்ளார் கோலி. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராஞ்சியில் நேற்று நடந்த போட்டியில் கோலி சதமடித்ததும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், கோலியை புகழ்ந்து ஒரு டுவீட் செய்துள்ளார். அதில், என்ன காமெடி பண்றீங்களா கோலி..? மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரையும் முட்டாள்கள் ஆக்கிவிட்டீர்கள் என்று கோலியின் திறமையை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.