ஐபிஎல் 14வது சீசனில் சிஎஸ்கே அணி மீண்டுமொரு முறை டைட்டிலை வெல்லும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளில் ஒன்று தோனி தலைமையிலான சிஎஸ்கே. மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்றுள்ள நிலையில், சிஎஸ்கே அணி 3 முறை டைட்டிலை வென்றுள்ளது.
2008லிருந்து 2019 வரை ஆடிய 12 சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றிருந்த சிஎஸ்கே அணி, 2020ல்(13வது சீசனில்) முதல் முறையாக பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் லீக் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றமளித்தது.
இதையடுத்து, தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, வயதான வீரர்களை கொண்ட அணி என்பதை சுட்டிக்காட்டி, அந்த அணியை Dad’s Army என்று பலரும் கிண்டலடித்தனர். தோனி, ஷேன் வாட்சன், டுப்ளெசிஸ், பிராவோ, ராயுடு, முரளி விஜய், கேதர் ஜாதவ் ஆகிய 35 வயதுக்கும் மேற்பட்ட வீரர்களை கொண்ட சிஎஸ்கே அணியை வயதான வீரர்களை கொண்ட அணி என்றும், அதுதான் அந்த அணியின் தோல்விக்கு காரணம் என்றும் விமர்சித்தனர்.
கடந்த சீசனில் சொதப்பிய சிஎஸ்கே அணி, அதை சற்றும் பொருட்படுத்தாமல், கடந்த சீசனில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு, அணி காம்பினேஷனில் சில மாற்றங்களை செய்து, இந்த சீசனின் முதல் பாதியில் பழைய சிஎஸ்கேவாக ஆடி வெற்றிகளை பெற்றது.
ஐபிஎல் 14வது சீசனின் முதல் பாதியில் ஆடிய 7 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது சிஎஸ்கே அணி. இந்நிலையில், இந்த சீசனில் 4வது முறையாக சிஎஸ்கே அணி கோப்பையை வெல்லும் என்று கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள கெவின் பீட்டர்சன், ஐபிஎல் 14வது சீசன் தொடங்குவதற்கு முன்பாக சிஎஸ்கே அணியை Dad's Army என்று பலரும் கிண்டலடித்தனர். ஆனால் 14வது சீசனின் முதல் பாதியில் சிஎஸ்கே அருமையாக ஆடியது. சிஎஸ்கே அணி வீரர்களுக்கு இந்த 4 மாத இடைவெளி எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை. அவர்கள் ஒருவேளை தயாராக இருப்பார்களேயானால், அடுத்த சில வாரங்கள் அந்த அணிக்கு வரலாற்று சிறப்புமிக்கவையாக அமையும். மீண்டுமொருமுறை சிஎஸ்கே கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது என்று கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
