உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. 

நீண்ட இழுபறியில் இருந்த 4ம் வரிசை வீரருக்கான இடத்திற்கு விஜய் சங்கரையும் மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கையும் தேர்வு செய்திருந்தது தேர்வுக்குழு. 4ம் வரிசையில் ராயுடு கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கடைசி இரண்டு தொடர்களில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அசத்தி கடைசி நேரத்தில் உலக கோப்பை அணியில் இடம்பிடித்துவிட்டார் விஜய் சங்கர். அதனால் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்கும் என்று பெரிதும் நம்பியிருந்த ராயுடுவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

இந்திய அணி மிடில் ஆர்டரில் வலுவாக திகழ்ந்த அணி. சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விவிஎஸ் லட்சுமணன், யுவராஜ் சிங் என பல சிறந்த வீரர்கள் நான்காம் வரிசையில் இறங்கியுள்ளனர். யுவராஜ் சிங்கிற்கு பின்னர் அந்த இடத்திற்கு சிறந்த வீரரை கண்டறிய முடியாமல் இந்திய அணி திணறியது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ரஹானே, ரெய்னா, மனீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், ராயுடு உட்பட பல வீரர்கள் பரிசோதிக்கப்பட்டனர். ஆனால் யாருமே வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. 

வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்ததும் ராயுடுதான் நான்காம் வரிசை வீரர் என்று உறுதியாக தெரிவித்து அவருக்கு நம்பிக்கையூட்டினார் கேப்டன் கோலி. ஆனால் விஜய் சங்கரின் அண்மைக்கால சிறப்பான ஆட்டம் அவருக்கு உலக கோப்பை அணியில் இடத்தை பெற்றுக்கொடுத்தது. 

ஆனாலும் விஜய் சங்கரின் தேர்வை இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் சரியானதாக பார்க்கவில்லை. அந்த இடத்திற்கு விஜய் சங்கர் சிறந்தவர் என்று பீட்டர்சன் கருதவில்லை. இதை அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள பீட்டர்சன், உலக கோப்பையில் நான்காம் வரிசையில் இறங்குவதற்கு விஜய் சங்கர் சிறந்த வீரர் என்று நான் கருதவில்லை. நான்காம் வரிசையில் மிகச்சிறந்த வீரர்கள் இறங்கி பார்த்திருக்கிறேன். அவர்களுடன் ஒப்பிடுகையில் அவர்களின் பக்கத்தில் கூட விஜய் சங்கரால் வரமுடியாது. அதுவும் இங்கிலாந்து கண்டிஷனுக்கு அவர் சரியாக இருப்பார் என கருதவில்லை. விஜய் சங்கர், கேதர் ஜாதவ் ஆகிய இருவருக்குமே அவர்கள் பவுலிங் போடுவதுதான் வாய்ப்பை பெற்று கொடுத்துள்ளது என்று பீட்டர்சன் தெரிவித்தார்.