உலக கோப்பை விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்துதான் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய அணி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகச்சிறந்த பவுலிங் யூனிட்டை பெற்றுள்ளது. இந்திய அணியின் பலமே டாப் ஆர்டர் பேட்டிங்கும் பவுலிங்கும்தான். மிடில் ஆர்டர் சொதப்பிவந்த நிலையில், தோனி செம ஃபார்முக்கு திரும்பியுள்ளார். ராகுலும் நான்காம் வரிசையில் நன்றாக ஆடுகிறார். 

எனவே நல்ல கலவையிலான முழு பலம் வாய்ந்த சிறந்த அணியாக இந்திய அணி திகழ்கிறது. இந்த முறை சிறந்த பவுலிங் யூனிட்டுடன் உலக கோப்பைக்கு சென்றிருப்பதுதான் இந்திய அணியின் பெரிய பலம். உலகின் நம்பர் 1 பவுலரான பும்ராவின் பவுலிங் தான் இந்திய அணிக்கும் எதிரணிக்கும் இடையேயான வித்தியாசமாக அமைகிறது. 

பும்ரா தான் எதிரணிகளுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறார். தொடக்க ஓவர்களிலும் சரி, டெத் ஓவர்களிலும் மிரட்டிவிடுகிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் அபாரமாக வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ராவின் பவுலிங்கை சமாளிக்க தெரியாத அணி, கண்டிப்பாக இந்திய அணியிடம் மண்டியிட்டு விடும். அதுதான் எதார்த்தம். 

இந்நிலையில், பும்ராவின் பவுலிங்கை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று வலது கை பேட்ஸ்மேன்களுக்கு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் ஆலோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவீட் செய்துள்ள பீட்டர்சன், வலது கை பேட்ஸ்மேன்களுக்கு அவசர அறிவிப்பு - பும்ரா பந்துவீசும்போது ஆஃப் திசையில் நகன்று பந்தை, ஸ்டம்புக்கு பின் பக்கத்திலிருந்து ஸ்கொயர் லெக் திசைக்கு இடைப்பட்ட பகுதியில் அடியுங்கள். ஆஃப் திசையில் அடிக்காதீர்கள் என்று பீட்டர்சன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.