உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில் வதோதராவில் மகாராஷ்டிராவிற்கும் சத்தீஸ்கருக்கும் இடையே நடந்த போட்டியில், டாஸ் வென்ற சத்தீஸ்கர் அணி முதலில் பேட்டிங் ஆடியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ரிஷப் திவாரி மற்றும் ஷேஷான்க் சந்திரேகர் ஆகிய இருவரும் தலா 44 ரன்கள் அடித்தனர். கேப்டன் ஹர்ப்ரீத் சிங் 42 ரன்கள் அடிக்க, சத்தீஸ்கர் அணி 20 ஓவரில் 192 ரன்கள் அடித்தது.

193 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய மகாராஷ்டிரா அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராகுல் திரிபாதி ஆகியோர் முறையே 15 மற்றும் 14 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த கேதர் ஜாதவ் மற்றும் நௌஷத் ஷேக் ஆகிய இருவரும் சத்தீஸ்கரின் பவுலிங்கை பொளந்துகட்டினர். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி இருவருமே அரைசதம் அடித்தனர். 

2 விக்கெட்டுக்கு பிறகு விக்கெட்டே விட்டுக்கொடுக்காமல் அவர்களே கடைசி வரை களத்தில் நின்று மகாராஷ்டிரா அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர். ஐபிஎல்லில் சொதப்பலான பேட்டிங் மற்றும் எந்தவிதத்திலும் சிஎஸ்கே அணிக்கு பங்களிப்பு செய்யாதது ஆகிய காரணங்களால் நக்கல், நையாண்டிகளுக்கு உள்ளான கேதர் ஜாதவ், இந்த போட்டியில் 45 பந்தில் தலா ஐந்து பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களுடன் 84 ரன்களை விளாசினார். ஷேக்கும் 44 பந்தில் 78 ரன்கள் அடிக்க, கடைசி ஓவரின் கடைசி பந்தில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது மகாராஷ்டிரா அணி.