கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகமாகிவரும் நிலையில், சமூக பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் அனைத்து சமூக பொருளாதார செயல்பாடுகளும் முற்றிலுமாக முடங்கியுள்ளன. நாட்டு மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 722ஆகவும் பலியானோரின் எண்ணிக்கை 18ஆகவும் உள்ளது. கொரோனாவை அழிக்கும் நோக்கில், இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்கள் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்துவருகின்றனர்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய, ஆதரவற்றோருக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அரசுடன் இணைந்து செயல்படும் நோக்கில் தனது பங்கிற்கு, ரூ.50 லட்சம் மதிப்பிலான அரிசியை இலவசமாக வழங்கினார் கங்குலி. பேட்மிண்ட்டன் வீராங்கனை பிவி சிந்து தன் பங்கிற்கு ஆந்திர மாநில முதல்வர் நிதிக்கு ரூ.5 லட்சத்தை வழங்கியிருந்தார்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ், தனது பிறந்தநாளான நேற்றைய தினம், ரத்ததானம் செய்துள்ளார். புனேவில் ஒரு நோயாளிக்கு ரத்தம் தேவைப்பட்டுள்ளது. அந்த நோயாளிக்கு கேதர் ஜாதவ் ரத்தம் கொடுத்துள்ளார்.

கேதர் ஜாதவின் செயல், ஒரு மிகச்சிறந்த முன்னுதாரணம் என்றும் ரத்த சேவா பரிவார் அவரை பாராட்டியுள்ளது. பின்னர் அங்கிருந்தவர்கள் அவருக்கு பாட்டு பாடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். 

கேதர் ஜாதவின் செயலை ரசிகர்கள் வெகுவாக பாராட்டிவருகின்றனர். டுவிட்டரில் அவருக்கு ரசிகர்கள் பாராட்டுமழை பொழிந்துவருகின்றனர்.

கேதர் ஜாதவ் இந்திய அணிக்காக 73 ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.