ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் கேதர் ஜாதவும் புவனேஷ்வர் குமாரும் இணைந்து 10 ஆண்டு கால சாதனை ஒன்றை முறியடித்துள்ளனர். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடரில் முதல் 4 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வென்றதால் 2-2 என தொடர் சமநிலை அடைந்தது. தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் களமிறங்கின. 

டெல்லியில் நேற்று நடந்த அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, உஸ்மான் கவாஜாவின் சதம் மற்றும் ஹேண்ட்ஸ்கம்பின் பொறுப்பான அரைசதத்தால் அந்த அணி 272 ரன்களை எடுத்தது. 

273 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானதை அடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி, தொடரையும் 3-2 என வென்றது. 

273 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா மட்டுமே அரைசதம் அடித்தார். தவான், கோலி, ரிஷப், விஜய் சங்கர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அரைசதம் அடித்த ரோஹித் சர்மாவும் நிலைத்து ஆடி அணிக்கு வெற்றியை தேடித்தரவில்லை. 

132 ரன்களுக்கே இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், 7வது விக்கெட்டுக்கு கேதர் ஜாதவும் புவனேஷ்வர் குமாரும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு  91 ரன்களை குவித்தது. புவனேஷ்வர் குமார் 46 ரன்களும் கேதர் ஜாதவ் 44 ரன்களும் எடுத்தனர். ஆனாலும் இவர்களின் இன்னிங்ஸ் இந்திய அணியின் வெற்றிக்கு உதவவில்லை. 

ஆனால் 10 ஆண்டுகால சாதனையை இந்த ஜோடி முறியடித்துவிட்டது. 2009ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஹர்பஜன் சிங்கும் பிரவீன் குமாரும் இணைந்து 7வது விக்கெட்டுக்கு 84 ரன்களை சேர்த்ததே அதிகபட்ச 7வது விக்கெட் பார்ட்னர்ஷிப் ஸ்கோராக இருந்தது. நேற்றைய போட்டியில் 7வது விக்கெட்டுக்கு 91 ரன்களை சேர்த்ததன் மூலம் 10 ஆண்டுகால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.