ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐபிஎல் தொடர் நடக்கவுள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐபிஎல் நடக்கவுள்ளதால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனைவரும் நடக்கவேண்டும். 

ஐபிஎல் அணிகள் வரும் 20ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லவுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கிளம்புவதற்கு முன் அவரவர் சொந்த நாட்டில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். பின்னர் ஐக்கிய அரபு அமீரகம் சென்றதும், அங்கு பரிசோதனை செய்யப்படும்.

அனைத்து வீரர்களும், பயிற்சியாளர்களும், அணி நிர்வாகிகளும் ஐபிஎல்லுக்காக தயாராகிவருகின்றனர். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கருண் நாயர் குணமடைந்துள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரரான கருண் நாயருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, 2 வாரங்களாக தன்னை தனிமைப்படுத்திக்கொண்டிருந்தார் கருண் நாயர். கருண் நாயருக்கு கடந்த 8ம் தேதி எடுத்த பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என வந்தது. 

கருண் நாயர் கொரோனாவிலிருந்து குணமடைந்திருந்தாலும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கிளம்புவதற்கு முன் மேலும் 3 பரிசோதனைகள் செய்யப்படும். ஆனால் கருண் நாயர் கொரோனாவிலிருந்து மீண்டுவிட்டதால், அவர் ஐபிஎல்லில் ஆடுவது உறுதியாகியுள்ளது.