விஜய் ஹசாரே தொடரின் இறுதி போட்டியில் தமிழ்நாடும் கர்நாடகாவும் ஆடிவருகின்றன. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கர்நாடக அணி, பவுலிங் தேர்வு செய்ததை அடுத்து தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் ஆடியது. 

தமிழ்நாடு அணியில் அபினவ் முகுந்த் மற்றும் பாபா அபரஜித் ஆகிய இருவர் மட்டுமே சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்தனர். அபினவ் 85 ரன்களையும் அபரஜித் 66 ரன்களையும் அடித்து ஆட்டமிழந்தனர். அவர்களை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிதாக சோபிக்கவில்லை. தமிழ்நாடு அணி 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 253 ரன்கள் என்ற எளிய இலக்கை கர்நாடக அணி விரட்டிவருகிறது. கர்நாடக அணியின் மயன்க் அகர்வாலும் ராகுலும் அபாரமாக ஆடிவருவதால் அந்த அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 

இந்த போட்டியில் கர்நாடக பவுலர் அபிமன்யூ மிதுன் மொத்தமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதில் ஹாட்ரிக்கும் அடக்கம். கடைசி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் ஷாருக்கானையும் நான்காவது பந்தில் முகமதுவையும் ஐந்தாவது பந்தில் முருகன் அஷ்வினையும் வீழ்த்தினார். 

இதன்மூலம் விஜய் ஹசாரேவில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் கர்நாடக பவுலர் என்ற சாதனையை மிதுன் படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ரஞ்சி மற்றும் விஜய் ஹசாரே ஆகிய இரண்டு தொடர்களிலும் ஹாட்ரிக் வீழ்த்திய இரண்டாவது பவுலர் என்ற சாதனையையும் மிதுன் படைத்துள்ளார்.