உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இந்திய அணி உள்ளது. 

அந்த நம்பிக்கைக்கு ஏற்ப இந்திய அணியும் சிறப்பாக ஆடி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் மிகப்பெரிய பலமே டாப் ஆர்டர் பேட்டிங்கும் பவுலிங்கும் தான். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சதமடித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தவான் சதமடித்தார். இந்திய அணியின் டாப் ஆர்டரில் ஒருவர் பெரிய இன்னிங்ஸ் ஆடினால் கண்டிப்பாக இந்திய அணியின் வெற்றி உறுதி.

இந்நிலையில், ஐசிசி தொடர்களில் அபாரமாக ஆடக்கூடியவரான தவான், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் காயமடைந்ததால் அடுத்த சில போட்டிகளில் ஆடமாட்டார். தவான் ஆடாதது இந்திய அணிக்கு பேரிழப்பு. அதனால் ரோஹித்துடன் ராகுல் தொடக்க வீரராக களமிறங்க உள்ளார். தவான் விரைவில் குணமடைந்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தவான் முழு உடற்தகுதியை பெறாத பட்சத்தில் அவருக்கு பதிலாக அணியில் இணைவதற்காக ரிஷப் பண்ட் இங்கிலாந்து சென்றுள்ளார். 

தவானுக்கு பதிலாக ரிஷப் பண்ட்டா ராயுடுவா என்ற விவாதம் பொதுவெளியிலும் ஊடகங்களிலும் நடந்தது. ஆனால் தவானுக்கு பதிலாக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டு இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில், தவானுக்கு பதிலாக ரிஷப் பண்ட் - ராயுடு இருவருமே தேவையில்லை. ரஹானேவின் பெயர் பரிசீலனை பட்டியலில் இருந்தால் சற்றும் யோசிக்காமல் அவரை அணியில் எடுக்கலாம். உலக கோப்பை தொடர் உட்பட ஐசிசி தொடர்களில் ஆடிய அனுபவம் உள்ளவர் ரஹானே. அவரை தொடக்க வீரராகவும் இறக்கலாம், மிடில் ஆர்டரிலும் இறக்கலாம். அந்தவகையில் ரஹானேவை தேர்வு செய்யலாம் என்று கபில் தேவ் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.