இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் உலக கோப்பையுடன் முடிந்துவிட்டது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரை கருத்தில்கொண்டு அந்த தொடர் முடியும் வரை பயிற்சியாளர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. 

வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் பயிற்சியாளர்களின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், புதிய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஜெயவர்தனே, டாம் மூடி, மைக் ஹெசன் ஆகியோர் விண்ணப்பிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஆனால் இதுகுறித்த எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவுள்ளதாக கூறப்படுபவர்களும் அந்த தகவலை உறுதி செய்யவில்லை. ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு ஜாண்டி ரோட்ஸ் விண்ணப்பித்திருப்பது மட்டுமே உறுதியாகியுள்ளது.

தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரியும் கண்டிப்பாக மீண்டும் விண்ணப்பிப்பார். ஜெயவர்தனே, டாம் மூடி, மைக் ஹெசன் என பெரிய பெயர்கள் அடிபடுகின்றன. எனவே தலைமை பயிற்சியாளருக்கான போட்டி கடுமையாக இருக்கும். 

தலைமை பயிற்சியாளரை கிரிக்கெட் ஆலோசனைக்குழு இண்டர்வியூ செய்து நியமிக்கும். மற்ற பயிற்சியாளர்களை பிசிசிஐ சி.இ.ஓ நியமிப்பார். சச்சின் டெண்டுல்கர், கங்குலி, லட்சுமணன் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை குழு தான், கடந்த முறை ரவி சாஸ்திரியை தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்தது. ஆனால் இவர்கள் இரட்டை பதவியில் நீடிப்பதால் சிக்கல் ஏற்பட்டது. 

எனவே மகளிர் அணிக்கான தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் கபில் தேவ், கெயிக்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை குழுதான் இந்திய ஆண்கள் அணிக்குமான தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் என்பதை பிசிசிஐ நிர்வாகக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் மாத மத்தியில் இந்த நேர்காணல் நடத்தப்படவுள்ளது.