ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் கோலி, ஸ்மித் ஆகிய இருவரையும் முந்தி நேரடியாக முதலிடத்தை பிடித்தார் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடிவரும் நிலையில், நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் ஆடிவருகிறது. சமகாலத்தின் சிறந்த வீரர்களாக விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் ஆகிய மூவரும் திகழ்ந்துவரும் நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக விராட் கோலியும் ஸ்டீவ் ஸ்மித்துமே மாறி மாறி ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துவருகின்றனர்.
இவர்கள் இருவருமே முதல் 2 இடங்களை பிடித்துவந்தனர். இந்நிலையில், இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அரைசதம் அடித்த கோலி, அவருக்கு குழந்தை பிறக்கவுள்ளதால் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல் நாடு திரும்பிவிட்டார். ஸ்டீவ் ஸ்மித்தோ, படுமோசமாக ஆடிவருகிறார். இந்தியாவுக்கு எதிராக 4 இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே வெறும் 10 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். ஒரு இன்னிங்ஸில் கூட அவரால் இரட்டை இலக்கத்தைக்கூட எட்ட முடியவில்லை.
ஆனால் கேன் வில்லியம்சனோ கடைசி 2 டெஸ்ட் தொடர்களில் அபாரமாக ஆடிவருகிறார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இரட்டை சதமடித்த கேன் வில்லியம்சன், பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் சதமடித்து(129), நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். அந்த போட்டியில் 101 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
இதையடுத்து அந்த போட்டிக்கு பின்னர் ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் கோலி, ஸ்மித் ஆகிய இருவரையும் பின்னுக்குத்தள்ளி 3ம் இடத்திலிருந்து நேரடியாக முதலிடத்திற்கு முன்னேறினார் வில்லியம்சன். 2021ம் ஆண்டை நம்பர் 1 பேட்ஸ்மேனாக தொடங்குகிறார் வில்லியம்சன். கோலி 2ம் இடத்திலும், ஸ்மித் 3ம் இடத்திலும் உள்ளனர். லபுஷேன் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் முறையே 4 மற்றும் 5ம் இடங்களில் உள்ளனர். ரஹானே ஆறாம் இடத்தில் உள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 31, 2020, 4:18 PM IST