2024 டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா பயன்படுத்திய வெற்றி உத்தியை இந்தியா ஆசிய கோப்பையில் இழக்கும் என்று முகமது கைப் தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் நாளை ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஹாங்காங் ஆகிய 8 அணிகள் இந்த தொடரில் விளையாடுகின்றன. டி20 போட்டி வடிவத்தில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ம் தேதி நடைபெறுகிறது.
ரோஹித் சர்மா பயன்படுத்திய வெற்றி உத்தி
இந்நிலையில், 2024 டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா பயன்படுத்திய வெற்றி உத்தியை இந்தியா ஆசிய கோப்பையில் இழக்கும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான முகமது கைஃப் தெரிவித்துள்ளனர். டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் மூன்று ஆல்ரவுண்டர்கள் இருந்தனர் என்றும், இது அவர்களின் பேட்டிங்கிற்கு ஆழத்தை சேர்த்ததாகவும், அவர்களின் பந்துவீச்சை வலுப்படுத்தியதாகவும் முகமது கைஃப் சுட்டிக்காட்டினார்.
ஆசிய கோப்பையில் 2 ஆல்ரண்டர்கள் மட்டுமே உள்ளனர்
ஆனால் ஆசியக் கோப்பையில் இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் அக்சர் படேல் என இரண்டு ஆல்ரவுண்டர்கள் மட்டுமே உள்ளனர். ஆகவே இந்தியா ஒரு புதிய வெற்றிகரமான கூட்டணியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கைஃப் கூறியுள்ளார். ''ரோஹித்தின் அணி மூன்று ஆல்ரவுண்டர்களுடன் டி20 உலகக் கோப்பையை வென்றது. அவர்களிடம் அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹார்திக் பாண்ட்யா இருந்தனர். இந்தியாவுக்கு ஆறு பந்துவீச்சு விருப்பங்கள் இருந்திருக்கும். எட்டாவது எண் வரை பேட்டிங் செய்வார்கள்.
சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் வேண்டும்
ஆசிய கோப்பையில், இரண்டு உண்மையான ஆல்ரவுண்டர்கள் மட்டுமே உள்ளனர். இந்தியா ஒரு புதிய வெற்றிகரமான கூட்டணியைக் கண்டுபிடிக்க வேண்டும். வாஷிங்டன் சுந்தரை மிஸ் செய்வார்கள்" என்று முகமது கைஃப் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். முன்னதாக, சஞ்சு சாம்சனை இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்று கைஃப் தெளிவுபடுத்தியிருந்தார்.
சஞ்சுவின் சிறப்பான பேட்டிங்
''திலக் வர்மாவை ஒதுக்கி வைத்துவிட்டு, சஞ்சுவை ஒன் டவுன் ஆக இறக்க வேண்டும். ரஷீத் கான் போன்ற சுழற்பந்து வீச்சாளர்களை மிடில் ஓவர்களில் சிக்ஸர் அடிக்க சஞ்சு சாம்சன் அணியில் இருக்க வேண்டும். தென்னாப்பிரிக்காவில் இரண்டு சதங்கள் அடித்த வீரர் சஞ்சு, இது எதிராக பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமான நாடு. சஞ்சுவுக்கு வேகம் மற்றும் சுழற்பந்து வீச்சை நன்றாக விளையாடத் தெரியும்'' என்று கைஃப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
