வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ், டாஸ்மானியா அணிக்கு எதிரான அந்த போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் அவுட்டான கடுப்பில், ஓய்வறைக்கு சென்றதும் சுவரில் கோபமாக ஓங்கி குத்தியுள்ளார். அதில் அவரது கையில் எலும்புமுறிவு ஏற்பட்டது. 

மிட்செல் மார்ஷ் கோபத்தில் செய்த அந்த செயலால், பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆடும் வாய்ப்பை இழந்துள்ளார். பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. 

இதில் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21ம் தேதி தொடங்குகிறது. அந்த போட்டிக்குள்ளாக மிட்செல் மார்ஷின் காயம் சரியாகாது என்பதால் அந்த போட்டியில் அவர் ஆடமுடியாது. இந்நிலையில், மிட்செல் மார்ஷின் செயல் குறித்து ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அவர்(மார்ஷ்) ஒரு முட்டாள் என்று லாங்கர் தெரிவித்தார். 

லாங்கர் தன்னை முட்டாள் என்று கூறியதாக மிட்செல் மார்ஷே தெரிவித்துள்ளார். விளையாட்டு வீரர்களுக்கு சுயகட்டுப்பாடும், எந்த சூழலிலும் நிதானமாக செயல்படும் தன்மையும் வேண்டும். அது இல்லாமல் ஆத்திரத்தில் சீன் போடுவதற்காக குத்தி, கையை உடைத்துகொண்டதால் இப்போது பாதிப்பு மார்ஷுக்குத்தான். 

தனது தவறை உணர்ந்த மிட்செல் மார்ஷ், இது எனக்கு மட்டுமல்ல, மற்ற வீரர்களுக்கும் ஒரு சிறந்த பாடம் என்று தெரிவித்துள்ளார்.