இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்றுவிதமான போட்டிகளிலும் அபாரமாக பேட்டிங் ஆடி ஸ்கோர் செய்துவருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் விராட் கோலி, எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்கிறார்.

போட்டியின் முடிவை தீர்மானிக்கும் மாபெரும் சக்தி விராட் கோலி. விராட் கோலி விக்கெட்டை வீழ்த்திவிட வேண்டும் என்பது இப்போதைய பவுலர்களின் கனவாக உள்ளது. அதிலும் கோலியின் விக்கெட்டை விரைவில் வீழ்த்துவது என்பது மிகக்கடினம். அரிதினும் அரிதாகத்தான் சீக்கிரம் அவுட்டாவார்.

எதிரணிகள் அனைத்திற்கும் சிம்மசொப்பனமாக திகழ்ந்த கோலிக்கே, சிம்மசொப்பனமாக பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர் ஜுனைத் கான் ஒரு தொடரில் இருந்தார். கோலி மிகச்சிறப்பாக ஆடும் அதேவேளையில், சொதப்பினால், ஒரு தொடர் முழுவதுமாக சொதப்பிவிடுவார். 2014 இங்கிலாந்துக்கு எதிரான தொடர் உட்பட சில தொடர்கள் அதற்கு எடுத்துக்காட்டு. 

அந்தவகையில் 2012ல் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தொடரிலும் அப்படித்தான் சொதப்பினார் கோலி. 2012ல் பாகிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. 2 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடந்தது. டி20 தொடர் 1-1 என சமனடைந்தது. ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2-1 என வென்றது. 

அந்த ஒருநாள் தொடரில் கோலி 3 போட்டிகளிலும் சேர்த்தே மொத்தமாக வெறும் 13 ரன்கள் மட்டுமே அடித்தார். ஜுனைத் கானின் பவுலிங்கில் அந்த தொடரில் மொத்தமாகவே 3 ரன்கள் மட்டுமே அடித்த கோலி, 3 போட்டிகளிலும் ஜுனைத் கானின் பவுலிங்கில்தான் அவுட்டானார். 

அதுகுறித்து பேசியுள்ள ஜுனைத் கான், நான் கோலிக்கு வீசிய முதல் பந்து அகலப்பந்து. ஆனால் அதற்கு அடுத்த பந்திலேயே கோலியை வீழ்த்தினேன். கோலியை வீழ்த்தியதும் அவரும் சாதாரண பேட்ஸ்மேன் என்று நினைத்துக்கொண்டேன். அந்த தொடருக்கு முன்பாக, இந்திய ஆடுகளங்களில் பந்து பெரியளவில் ஸ்விங் ஆகாது என்று என்னிடம் கோலி கூறினார். பார்க்கலாம் என்று நான் அவருக்கு பதிலளித்தேன். அது நான் மிகச்சிறப்பாக பந்துவீசிக்கொண்டிருந்த நேரம். 

அந்த இந்திய சுற்றுப்பயணத்துக்கு முன்பாக ஃபைசலாபாத்தில் உள்நாட்டு போட்டிகளில் ஆடினேன். உள்நாட்டு தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் 35-40 ஓவர்கள் வீசியதால், இந்திய சுற்றுப்பயணம் எனக்கு சிறப்பானதாக அமைந்தது. இந்தியாவுக்கு எதிராக நான் சிறப்பாக பந்துவீசினால் மட்டுமே என்னால் மீண்டும் பாகிஸ்தான் அணியில் கம்பேக் கொடுக்க முடியும். அதுமட்டுமே என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இந்தியாவில் சிறப்பாக பந்துவீசி அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவது எனக்கு அந்த நேரத்தில் முக்கியமானதாக இருந்தது என்று ஜுனைத் கான் தெரிவித்துள்ளார்.