கரீபியன் ப்ரீமியர் லீக் தொடர் நடந்துவருகிறது. இதில் பார்படோஸ் ட்ரைடண்ட்ஸ் மற்றும் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பார்படோஸ் அணியின் முதல் மூன்று வீரர்களும் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தனர். தொடக்க வீரர்கள் ஜோனாதன் கார்ட்டரும் ஜான்சன் சார்லஸும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 110 ரன்களை சேர்த்தனர். ஜோனாதன் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். 14வது ஓவரின் 5வது பந்தில் அவர் ஆட்டமிழந்ததை அடுத்து ஜேபி டுமினி களத்திற்கு வந்தார். 

எஞ்சிய 6 ஓவர்களில் டுமினி வெறும் 20 பந்துகள் மட்டுமே பேட்டிங் ஆடினார். அதில் அவுட்டான ஒரு பந்தை தவிர்த்துவிட்டால், 19 பந்துகள். அந்த 19 பந்துகளில் 65 ரன்களை குவித்து மிரட்டினார். களத்திற்கு வந்தது முதலே அடித்து ஆட தொடங்கிய டுமினி, 15 பந்துகளில் அரைசதம் கடந்தார். பவுண்டரிகளை விட சிக்ஸர்களை அதிகமாக விளாசி ரசிகர்களுக்கு வாணவேடிக்கை நிகழ்த்தி காட்டினார். 

20 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 65 ரன்களை குவித்து, கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார். டுமினியின் காட்டடியால் பார்படோஸ் அணி 20 ஓவர் முடிவில் 192 ரன்களை குவித்தது. 20 பந்துகள் பேட்டிங் ஆடிய டுமினியின் ஸ்ட்ரைக் ரேட் 325. 

193 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி, தொடக்கத்திலிருந்தே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துவந்தது. அந்த அணிக்கு ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் கூட அமையவில்லை. அதனால் 18வது ஓவரிலேயே 129 ரன்களுக்கே ஆல் அவுட்டானதால் பார்படோஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.