இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான 2வது டி20 போட்டி நேற்று சவுத்தாம்ப்டனில் நடந்தது. இந்த போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 157 ரன்கள் மட்டுமே அடித்தது. 158 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து, கடைசி வரை களத்தில் நின்று இங்கிலாந்து அணியை வெற்றி பெற செய்தார். ஜோஸ் பட்லரின் அதிரடியான மற்றும் பொறுப்பான பேட்டிங்கால் 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணியின் சார்பில் அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் 40 ரன்கள் அடித்தார். ஃபின்ச் 11வது ஓவரில் அவுட்டானார். ஃபின்ச் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தபோது, அடில் ரஷீத் வீசிய 7வது ஓவரில் ஒரு பந்தை தடுத்து ஆடினார் ஃபின்ச். அது தெளிவாக பேட்டில் ஆடப்பட்ட பந்து. ஆனால் அதற்கு இங்கிலாந்து வீரர்கள் அப்பீல் செய்ய, பந்து பேட்டில் பட்டது என்பதால் அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. 

ஆனால் அது உறுதியாக கால்காப்பில் பட்டதாக நம்பிய விக்கெட் கீப்பர் பட்லர், கேப்டன் மோர்கனிடம் ரிவியூ எடுக்க வலியுறுத்தினார். கேப்டன் மோர்கனும் ரிவியூ எடுத்தார். ரிவியூவில் பந்து, மிகத்தெளிவாக பேட்டில் பட்டது தெரியவந்தது. பேட்ஸ்மேன் முழுவதுமாக மறைத்து ஆடியதால் அந்த பந்து பேட்டில் பட்டதா கால்காப்பில் பட்டதா என்பதை கணிப்பது கஷ்டம் என்றாலும், பந்தின் திசையை வைத்து அதை கணித்துவிடலாம். ஆனால் அப்பட்டமாக பேட்டில் பட்ட பந்திற்கு இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பட்லர் ரிவியூ எடுக்க வலியுறுத்தியது, சமூக வலைதளங்களில் கடும் கிண்டலுக்குள்ளானது.