கிரிக்கெட்டில் எல்லா காலத்திலும் தலைசிறந்த ஃபீல்டர் என்றால் அது தென்னாப்பிரிக்காவின் ஜாண்டி ரோட்ஸ் தான். தென்னாப்பிரிக்க அணியில் 1992 முதல் 2003ம் ஆண்டுவரை ஆடினார். 

ஆல்டைம் பெஸ்ட் ஃபீல்டரான ஜாண்டி ரோட்ஸ், மைதானத்தின் எந்த இடத்திலும் அருமையாக ஃபீல்டிங் செய்யக்கூடியவர். 30 யார்டு வட்டத்துக்குள் ஃபீல்டிங்கில் மிரட்டிவிடுவார். அதிலும் குறிப்பாக பாயிண்ட் திசையில் நின்று அவர் பிடித்த அபாரமான கேட்ச்களும் செய்த மிரட்டலான ரன் அவுட்டுகளும் காலத்தால் அழியாதவை. 

ஃபீல்டிங் என்றால் உடனடியாக நினைவுக்கு வரும் பெயர் ஜாண்டி ரோட்ஸ் தான். ஃபீல்டிங்கின் அடையாளமாகவே ஜாண்டி ரோட்ஸ் திகழ்கிறார். 

அப்பேர்ப்பட்ட லெஜண்ட் ஃபீல்டரை, முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை எதிர்நோக்கியிருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, இந்த சீசனில் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளது. தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே, பேட்டிங் பயிற்சியாளராக வாசிம் ஜாஃபர் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளராக ஜாண்டி ரோட்ஸ் என மிகச்சிறந்தவர்களை பயிற்சியாளர் குழுவில் நியமித்துள்ளது பஞ்சாப் அணி.

அந்தவகையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 13வது சீசனுக்காக தயாராகிவரும் பஞ்சாப் அணிக்கு தீவிர ஃபீல்டிங் பயிற்சி கொடுத்துவருகிறார் ஜாண்டி ரோட்ஸ். வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கும் சாக்கில், 51 வயதிலும் அவரும் மிரட்டலாக ஃபீல்டிங் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

பயிற்சியின்போது அவரை விட்டு விலக்கி வீசப்பட்ட ஒரு பந்தை நின்ற இடத்திலிருந்தே டைவ் அடித்து செமயாக கேட்ச் பிடித்தார் ஜாண்டி ரோட்ஸ். அந்த வீடியோவை கிங்ஸ் லெவன் பஞ்சாப் டுவிட்டரில் பகிர்ந்தது. 

ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து, இந்த வயதிலும் ஜாண்டி ரோட்ஸின் ஃபிட்னெஸ் மற்றும் ஃபீல்டிங்கை வெகுவாக புகழ்ந்துவருகின்றனர்.