நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி வெறும் 55 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் பேர்ஸ்டோவின் அதிரடி சதம் மற்றும் ஓவர்டனின் அபார பேட்டிங்கால் சரிவிலிருந்து மீண்டும் ஆதிக்கம் செலுத்துகிறது இங்கிலாந்து.
இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று 2-0 என இங்கிலாந்து அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி ஹெடிங்லியில் நடந்துவருகிறது.
ஜூன் 23ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, டேரைல் மிட்செலின் அபார சதத்தால்(109) முதல் இன்னிங்ஸில் 329 ரன்களை குவித்தது. டாம் பிளண்டெல் 55 ரன்கள் அடித்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு டிரெண்ட் போல்ட் அதிர்ச்சியளித்தார். அலெக்ஸ் லீஸ்(4), ஜாக் க்ராவ்லி(6) மற்றும் ஆலி போப்(5) ஆகிய மூவரையும் ஒற்றை இலக்கத்தில் ஸ்டம்ப்பை கழட்டி வெளியேற்றினார். அதன்பின்னர் ஜோ ரூட் 5 ரன்னிலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 18 ரன்னிலும், பென் ஃபோக்ஸ் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழக்க, 55 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது இங்கிலாந்து அணி.
அதன்பின்னர் ஜானி பேர்ஸ்டோவும் ஜாமி ஓவர்டனும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக பேட்டிங் ஆடினர். ஜானி பேர்ஸ்டோ தனது இயல்பான அதிரடி பேட்டிங்கை ஆடினார். இங்கிலாந்து அணி இருந்த இக்கட்டான சூழலை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை ஆடி சதமடித்தார் பேர்ஸ்டோ. அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய ஓவர்டனும் அரைசதம் அடித்து சதத்தை நெருங்கியுள்ளார்.
இதையும் படிங்க - இவரை மாதிரியான ஒரு பிளேயர் இந்திய அணியில் கண்டிப்பா தேவை.! அதிரடி வீரருக்கு முன்னாள் வீரர் ஆதரவு
3ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் அடித்துள்ளது. ஜானி பேர்ஸ்டோ 126 பந்துகளில் 130 ரன்களையும், ஓவர்டன் 106 பந்துகளில் 89 ரன்களையும் குவித்துள்ளனர். இருவருமே பயப்படாமல் அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்ததுதான், இங்கிலாந்து அணி படுமட்டமான நிலையிலிருந்து தப்பித்ததற்கு காரணம்.
55 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்திய நியூசிலாந்து அணி இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. பேர்ஸ்டோ - ஓவர்டன் ஜோடி விக்கெட்டையும் இழக்காமல், இவ்வளவு வேகமாக ஸ்கோர் செய்வார்கள் என்பதை நியூசி., அணி எதிர்பார்க்கவில்லை.
