உலகம் முழுதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. 

1992ம் ஆண்டுக்கு பிறகு இந்த உலக கோப்பையில் தான் லீக் சுற்றில் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோத உள்ளன. அதனால் இதன் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பார்க்கப்படுகின்றன. 

உலக கோப்பை தொடர் நடக்க உள்ள இங்கிலாந்து ஆடுகளங்கள் முழுக்க முழுக்க பேட்டிங்கிற்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு இன்னிங்ஸில் 500 ரன்கள் அடிக்கக்கூட வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. இது ஒரு ஹை ஸ்கோரிங் தொடராக அமையப்போகிறது என்பது மட்டும் உறுதி.

விராட் கோலி, ரோஹித் சர்மா, வில்லியம்சன், வார்னர், ஸ்மித், ஜோ ரூட், பேர்ஸ்டோ, பட்லர், ஸ்மித், கெய்ல் என பல சிறந்த வீரர்கள் இந்த உலக கோப்பையில் ஆடுகின்றனர். ஒரே தொடரில் உலகின் பல சிறந்த வீரர்கள் ஆடும் நிலையில், இங்கிலாந்து ஆடுகளங்களும் பேட்டிங்கிற்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது பேட்ஸ்மேன்களுக்கு கூடுதல் பிளஸ் பாயிண்ட்டாக அமைந்துள்ளது. 

இந்நிலையில், இந்த உலக கோப்பை தொடரில் அபாயகரமான பேட்ஸ்மேன்கள் யார் என்று இங்கிலாந்து அணியின் இளம் ஃபாஸ்ட் பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சர் கருத்து தெரிவித்துள்ளார். விராட் கோலி, டேவிட் வார்னர், ஜோஸ் பட்லர் ஆகிய மூவரும் அபாயகரமான பேட்ஸ்மேன்கள் என்று தெரிவித்துள்ளார். 

இந்த உலக கோப்பையில் இவர்கள் மூவரும் தான் அபாயகரமான பேட்ஸ்மேன்கள் என்று ஆர்ச்சர் மட்டுமல்ல, இவருக்கு முன்னால் பல முன்னாள் வீரர்களும் இதே கருத்தைத்தான் தெரிவித்தனர். 

இங்கிலாந்து அணியின் இளம் ஃபாஸ்ட் பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சர், தனது அபாரமான பவுலிங்கால் கடைசி நேரத்தில் உலக கோப்பை அணியில் இடம்பிடித்தார். டேவிட் வில்லிக்கு பதிலாக அணியில் இடம்பிடித்தார். ஐபிஎல்லில் அபாரமாக வீசிய ஆர்ச்சர், அதன் விளைவாக அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணியில் அறிமுகமாகி, அதன்பின்னர் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரிலும் ஆடினார். 

இங்கிலாந்து அணியில் அறிமுகமான உடனேயே உலக கோப்பை அணியில் ஆர்ச்சர் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.