உலக கோப்பை நெருங்கிய நிலையில், அதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எகிறியுள்ளது. உலக கோப்பை தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ளதால் ரசிகர்கள் அந்த கிரிக்கெட் திருவிழாவை காண ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். 

இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்துதான் வெல்லும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மற்றும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆகிய இரு அணிகளுமே சமபலத்துடன் வலுவாக இருப்பதுடன் தொடர்ச்சியாக அபாரமாக ஆடி கடந்த இரண்டு ஆண்டுகளில் வெற்றிகளை வாரி குவித்துள்ளன. 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள முதன்மையான இரு அணிகளாக கருதப்படும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டி ஜூன் 30ம் தேதி நடக்க உள்ளது. 

இந்தியாவுக்கு எதிரான போட்டியில், விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தும் முனைப்பில் உள்ளதாக இங்கிலாந்து இளம் ஃபாஸ்ட் பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சர் தெரிவித்துள்ளார். சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்பது ஒவ்வொரு பவுலரின் கனவாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. அந்த வகையில் ஆர்ச்சருக்கும் அந்த ஆசை உள்ளது. 

ஐபிஎல்லில் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் போய்விட்டது. ஆனால் உலக கோப்பையில் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்று முனைப்பில் இருக்கிறேன் என்று ஆர்ச்சர் தெரிவித்துள்ளார். 

உலக கோப்பைக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து அணியில், 3 மாற்றங்கள் செய்யப்பட்டு உறுதியான இறுதியான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அலெக்ஸ் ஹேல்ஸுக்கு பதில் வின்ஸ், டேவிட் வில்லிக்கு பதில் ஆர்ச்சர் மற்றும் ஜோ டென்லிக்கு பதில் டாவ்சன் ஆகிய மூவரும் அணியில் சேர்க்கப்பட்டனர். டேவிட் வில்லியின் இடத்தை ஜோஃப்ரா ஆர்ச்சர் பிடித்துள்ளார். இளம் வீரரான ஆர்ச்சர், தன்னை நிராகரிக்க முடியாத அளவிற்கு தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து அணியில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.