நியூசிலாந்துக்கு எதிரான  2வது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் அவரது அதிவேக சதத்தை பதிவு செய்ததுடன்,  டெஸ்ட் கிரிக்கெட்டில் 27 சதங்கள் அடித்து கோலி, ஸ்மித்தின் சாதனையை சமன் செய்தார். 

ஜோ ரூட்டின் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி கடந்த 2 ஆண்டுகளாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், ஜோ ரூட் அண்மையில் டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலகினார். இதையடுத்து பென் ஸ்டோக்ஸின் கேப்டன்சியை ஏற்க, ஸ்டோக்ஸின் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடிவருகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஜோ ரூட்டின் அபாரமான சதத்தால் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

2வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடந்துவரும் நிலையில், இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 553 ரன்களை குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, ஜோ ரூட்(176) மற்றும் ஆலி போப்பின்(145) அபாரமான சதங்களால் முதல் இன்னிங்ஸில் 539 ரன்களை குவித்தது.

இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய ஜோ ரூட் வெறும் 116 பந்துகளில் சதமடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட்டின் அதிவேக சதம் இதுதான். மேலும் இது டெஸ்ட் கிரிக்கெட்டில் ரூட்டின் 27வது சதம் ஆகும்.

விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் ஆகிய சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களும் 27 டெஸ்ட் சதங்களை அடித்துள்ள நிலையில், அவர்களை சமன் செய்துள்ளார் ரூட். கோலி 2019 நவம்பர் மாதத்திற்கு பின் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ஸ்மித் 2021 ஜனவரிக்கு பின் சதம் அடிக்கவில்லை.

ஆனால் செம ஃபார்மில் அபாரமாக ஆடிவரும் ஜோ ரூட், கடந்த ஒன்றரை ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 சதங்கள் அடித்துள்ளார். எனவே அடுத்த டெஸ்ட் போட்டியிலேயே கோலி, ஸ்மித்தை ரூட் முந்திச்செல்ல வாய்ப்புள்ளது.