இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்துவரும் 2வது டெஸ்ட்டில், முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் அனுபவ வீரர் ஆஞ்சலோ மேத்யூஸ் சிறப்பாக ஆடி சதமடித்தார். மேத்யூஸ் 110 ரன்கள் அடிக்க, டிக்வெல்லா(92), சண்டிமால்(52), தில்ருமான் பெரேரா(67) ஆகிய மூவரும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 381 ரன்கள் அடித்தது. 

இதையடுத்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் டோமினிக் சிப்ளி(0), ஜாக் க்ராவ்லி(5) ஆகிய இருவரையும் எம்பல்டேனியா வீழ்த்தினார். ஐந்து ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட இங்கிலாந்து அணியை கேப்டன் ரூட்டும் பேர்ஸ்டோவும் இணைந்து சரிவிலிருந்து மீட்டனர். 

ஆனால் பேர்ஸ்டோ 28 ரன்களில் எம்பல்டேனியாவின் பந்தில் ஆட்டமிழக்க, அவரது பந்திலேயே லாரன்ஸும் 3 ரன்னுக்கு வெளியேறினார். அரைசதம் அடித்த பட்லர் 55 ரன்களுக்கு ரமேஷ் மெண்டிஸின் பவுலிங்கில் அவுட்டானார். சாம் கரனை 13 ரன்களுக்கு வீழ்த்திய எம்பல்டேனியா, ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலங்கையின் இடது கை ஸ்பின்னர் எம்பல்டேனியாவின் பவுலிங்கில் ஒருமுனையில் இங்கிலாந்து வீரர்கள் ஆட்டமிழக்க மறுமுனையில் ஜோ ரூட் களத்தில் நங்கூரம் போட்டு சதமடித்தார். 3ம் நாள் ஆட்டத்தின் டீ பிரேக்கின்போது, இங்கிலாந்து அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் அடித்திருந்தது. ரூட் 137 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

3ம் நாள் ஆட்டத்தின் கடைசி செசனில், எம்பல்டேனியா மேலும் 2 விக்கெட்டுகளை(டோமினிக் பெஸ் மற்றும் மார்க் உட்) வீழ்த்த அபாரமாக ஆடி இரட்டை சதத்தை நெருங்கிய ஜோ ரூட், 186 ரன்களுக்கு ரன் அவுட்டானார். முதல் டெஸ்ட்டில் இரட்டை சதமடித்த(228) ஜோ ரூட், இந்த டெஸ்ட்டிலும் இரட்டை சதமடித்திருக்கலாம். ஆனால் அந்த வாய்ப்பை நழுவவிட, இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் அடித்திருந்த நிலையில், 3ம் நாள் ஆட்டம் முடிந்தது.